சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 44 வயதை எட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பல்வேறு பேச்சுகள் நிலவி வந்தன. அந்த வகையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடருக்காக தயாராகி வந்த தோனி ஒருநாள் முன்னதாக கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிப்பை சந்தித்தார்.
இன்று ஓய்வை அறிவிக்கிறாரா தோனி ? :
இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று நிர்வாகம் அறிவித்திருந்த வேளையில் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 12 ஆட்டங்களில் அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. மேலும் இந்த தொடரின் எஞ்சியுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு இருக்கும் என்கிற இக்கட்டான நிலையில் சி.எஸ்.கே அணி தற்போது இருக்கின்றது.
இவ்வேளையில் இன்று மே 18-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் முக்கிய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டி தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்றும் இந்த போட்டியில் விளையாடி விட்டு தோனி ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.
ஏனெனில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது தோனி : நான் என்னுடைய கடைசி ஒருநாள் போட்டியை ராஞ்சியில் விளையாடினேன். அதேபோன்று கடைசி டி20 போட்டியை சேப்பாக்கத்தில் விளையாட விரும்புகிறேன். அது இந்த ஆண்டு இருந்தாலும் சரி, ஐந்தாண்டுகளுக்கு பிறகு இருந்தாலும் சரி என்னுடைய கடைசி போட்டி சேப்பாக்கத்தில் தான் இருக்கும் என்றும் ரசிகர்களுக்காக நான் அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவின் மாபெரும் சாதனையை அடித்து காலி செய்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
இப்படி அவர் சொல்லி சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள வேளையில் தற்போது 44 வயதை எட்டியுள்ள தோனி அடுத்த தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்பதனால் நிச்சயம் இன்றைய போட்டியில் பங்கேற்று ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே வேளையில் தோனி இன்றைய போட்டியில் விளையாடினாலும் அடுத்த ஆண்டு ஓய்வு அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



