ஐபிஎல் 2022 : கோப்பையை தக்கவைக்க முதல் அணியாக பயிற்சியை துவங்கிய சி.எஸ்.கே – எங்கு தெரியுமா?

CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி வரும் மே 29ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிதாக 2 அணிகள் பங்கு பெறுவதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது.

இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பார்மட் அடிப்படையில் லீக் சுற்றில் மோதவுள்ளன. இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது மற்றும் எத்தனை பைனல்களில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்:
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக இடம் பிடித்துள்ளது. அதேபோல் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் குரூப் பி பிரிவில் முதல் அணியாக இடம்பெற்றுள்ளது.

குரூப் பி பிரிவில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பிரிவில் இருக்கும் எஞ்சிய 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். அத்துடன் தமக்கு நேரெதிராக குரூப் பி பிரிவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2 போட்டிகளில் மோதிய பின்னர் அதே குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் எஞ்சிய அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். இந்த அடிப்படையில் சென்னை அணி தனது 14 லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. குறிப்பாக வரும் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் 4 கோப்பைகளை வென்றுள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

சூரத்தில் சூப்பர் கிங்ஸ்:
கடந்த ஐபிஎல் 2021 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் இதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதால் நடப்பு சாம்பியனாக விளங்குகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை மீண்டும் வென்று நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சிகளை துவங்கியுள்ளது.

ஐபிஎல் துவங்க இன்னும் சுமார் 20 நாட்கள் உள்ள நிலையில் மும்பை, பெங்களூரு ஆகிய இதர அணிகளை காட்டிலும் இத்தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே சென்னை துவங்கியுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த பயிற்சியில் கேப்டன் எம்எஸ் தோனி, ருதுராஜ் கைக்வாட், அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா உள்ளிட்ட அந்த அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக சூரத் நகரை சென்றடைந்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அடங்கிய பேருந்தை அங்கு உள்ள ரசிகர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று வரவேற்றது சமூகங்களில் வைரலாகி வருகிறது.

தீபக் சஹர் சந்தேகம்:
சென்னை அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடி வந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா முதல் முறையாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்காத காரணத்தால் பங்கேற்கவில்லை. அத்துடன் கடந்த வருடம் 633 குவித்து 4-வது முறை சாம்பியன் பட்டம் வாங்க முக்கிய பங்காற்றிய தென்னாபிரிக்காவின் பப் டு பிளேஸிஸ் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களைத் தவிர கடந்த சீசனில் விளையாடிய பெரும்பாலான வீரர்களை அந்த அணி நிர்வாகம் மீண்டும் வாங்கியுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். இருப்பினும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் காயமடைந்த அவர் சென்னை அணி பங்கேற்கும் இந்த பயிற்சியில் களமிறங்கவில்லை. அவரின் காயம் பற்றி முழு தகவல் வெளிவராத நிலையில் இந்த தொடரில் அவர் பங்கேற்காமல் போனால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement