இந்திய அணியில் எனக்கு 4 பிரதர்ஸ் இருக்காங்க, அதுல அந்த 3 பேரை விட தோனி பெரியண்ணா மாதிரி – சஹால் நெகிழ்ச்சி பேட்டி

- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் கடந்த 2013 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி 2014 முதல் பெங்களூரு அணியில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2016இல் எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறிப்பாக லெக் ஸ்பின்னராக களமிறங்கிய அவர் குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிரந்தரமான இடத்தை பிடிக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் மகத்தான கேப்டனாக உருவெடுத்திருந்த எம்எஸ் தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால் பொதுவாகவே சரமாரியாக அடிக்கும் பேட்ஸ்மேன்களை எப்படி கட்டுப்படுத்தலாம், அவுட் செய்யலாம் என்பது போன்ற ஆலோசனைகளை தம்முடைய பவுலர்களுக்கு கொடுப்பது வழக்கமாகும்.

அந்த ஆலோசனைகளுடன் ஆரம்ப காலங்களில் சிறப்பாகவே செயல்பட்ட அவர் தோனி ஓய்வு பெற்ற 2019க்குப்பின் ஆதரவு கொடுக்க ஆள் இல்லாததால் ஃபார்மை இழந்து சுமாராக செயல்பட்டதால் 2021 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்டார். அதே போல பெங்களூரு அணியிலும் கழற்றி விடப்பட்ட அவர் அதற்காக மனம் தளராமல் போராடி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஊதா தொப்பியை வென்று மிகச்சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அப்போதிலிருந்து மீண்டும் நிலையான இடம் பிடித்து அசத்தி வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை (93*) எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

தோனி பெரியண்ணன்:
அப்படி இந்தியாவுக்காக 7 வருடங்களாக விளையாடி வரும் அவர் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தி வருகிறார். இந்நிலையில் பவுலரான தமக்கு மேற்குறிப்பிட்ட 4 கேப்டன்களும் எப்போதுமே போதுமான ஆதரவும் சுதந்திரமும் கொடுப்பதாக சஹால் தெரிவித்துள்ளார். அதில் தாம் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த தோனி தமக்கு பெரிய அண்ணனை போன்றவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் அவர் இது பற்றி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணியில் நிலவும் சூழ்நிலைகளை நான் இப்படி பார்க்கிறேன். அதாவது உங்களுக்கு இந்திய அணி என்னும் குடும்பத்தில் 4 சகோதரர்கள் இருக்கின்றனர். அதில் மஹி பாய் மூத்த சகோதரரை போன்றவர். அவரைத் தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் தற்போது ஹர்திக் பாண்டியா இருக்கிறார். எனவே அந்த கணக்கும் ஆதரவும் ஒன்றாகவே இருக்கிறது. எதுவும் மாறவில்லை. களத்தில் அனைவருமே தங்களுடைய அணி வெல்ல வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்”

- Advertisement -

“அந்த வகையில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுலராக எனக்கு சுதந்திரம் கொடுக்கிறார். குறிப்பாக முந்தைய காலங்களில் கிடைத்த அதே சுதந்திரத்தை தற்போது ஹர்திக் பாண்டியா கொடுக்கிறார். அதனால் ஃபீல்டிங் செட் செய்வது போன்ற முடிவுகளை பவுலர்களான நாங்களே எடுத்துக் கொள்கிறோம். ஒருவேளை எங்களுடைய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படாமல் போனால் ஹர்திக் பாண்டியா தம்முடைய ஆலோசனைகளை கொடுப்பார். அது போக அவரே முன்னின்று பந்து வீச வருவார்”

“எனவே கேப்டன்கள் மாறினாலும் நமது அணியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. அதனால் இந்திய அணியில் இருக்கும் பவுலர்கள் அனைத்து கேப்டன்களிடமும் ஒரே மாதிரியான சுதந்திரத்தையே பெறுகிறார்கள்” என்று கூறினார். இந்த நிலையில் 2024 டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்குவதற்காக தயாராகி வரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரீத் பும்ராவையே ஓரங்கட்டவுள்ள ஹார்டிக் பாண்டியா – சாதனை விவரம் இதோ

அதில் முதல் போட்டியில் சஹால், அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் தோல்வி கிடைத்தது. அதனால் பின் தங்கியுள்ள இந்தியா ஆகஸ்ட் 6ஆம் தேதி கயானாவில் நடைபெறும் 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement