- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : தோனியின் மகத்தான பல கண்டுபிடிப்புகளில் ஜொலிக்கும் ஜோடியாக நிரூபித்த தவான் – ரோஹித், ஒரு அலசல்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜஸ்பிரித் பும்ராவின் மிரட்டலான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 110 ரன்களுக்கு சுருண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அதன்பின் 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்கு பின் பழைய பன்னீர்செல்வங்களான ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 114/0 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்திலான மெகா வெற்றியை உறுதி செய்தனர்.

இதில் ஒருபுறம் ஷிகர் தவான் பொறுமையாக 4 பவுண்டரிகள் 31* (54) ரன்கள் எடுக்க மறுபுறம் வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76* (58) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இப்போட்டியில் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது இந்திய ஜோடியாக (5108* ரன்கள்) சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி (6609) ஆகியோருக்கு பின் வரலாற்று சாதனை படைத்தது.

- Advertisement -

சாதனை ஜோடி:
மேலும் உலக அளவில் அதிக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது ஜோடியாகவும் (18*) சச்சின் – கங்குலிக்கு (21) பின் இவர்கள் சாதனை படைத்துள்ளனர். மொத்தத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோருக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இந்திய ஓபனிங் ஜோடியாக இந்த இருவரும் செயல்பட்டுள்ளது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

ஆனால் இந்த ஜோடி உருவானதற்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி தான் முழுமுதற் காரணமாவர் என்பதே நிதர்சனம். ஆம் 2011 உலகக்கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய வீரேந்திர சேவாக் – கௌதம் கம்பீர் சீனியர் ஓப்பனிங் ஜோடி மூத்த வயதை நெருங்குகின்றனர் என்பதை உணர்ந்த தோனி அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தொடங்கினார்.

- Advertisement -

விமர்சனமும் ஆதரவும்:
அதற்கான வேலையை 2012இல் துவங்கிய அவர் 2006இல் அறிமுகமாகி மிடில் ஆர்டரில் ஏராளமான வாய்ப்புகளைப் பெற்று அதில் சிறப்பாக செயல்பட தவறியதால் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் தவித்த ரோகித் சர்மாவின் திறமையை கேப்டனாக பொறுப்பேற்றது முதல் கவனித்து வந்ததால் தொடக்க வீரராக களமிறக்கி பார்க்கலாம் என்ற எண்ணத்தை செயல்வடிவமாக்கினார். அவருக்கு ஜோடியாக 2010இல் அறிமுகமாகி அவரைப் போலவே நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த ஷிகர் தவானை இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் எதிரணிகளை திணறடிப்பதற்காக வலதுகை பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுடன் இணைத்தார்.

2012 இறுதியில் ஜோடி சேர்க்கப்பட்ட இவர்கள் வாய்ப்பளிக்கப்பட்ட ஆரம்பகட்ட போட்டிகளில் பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதால் 2013 பிப்ரவரியில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இவர்களை நிரந்தர ஜோடியை போல் முதல் போட்டியிலிருந்தே தொடக்க வீரர்களாக களமிறங்கும் வாய்ப்பை தோனி கொடுத்தார். அதை கச்சிதமாக பயன்படுத்திய இந்த ஜோடி ஒரு முக்கிய போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டது.

- Advertisement -

அதிலும் அந்த தொடரில் 363 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த ஷிகர் தவான் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்தற்கு முக்கிய பங்காற்றி தங்கபேட்டை வென்றார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா 177 ரன்கள் எடுத்தார். அதனால் இவர்கள் மீது 100% நம்பிக்கையை முழுமையாக வைத்த தோனி 2014, 2015, 2016 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் வாய்ப்பை கொடுக்கும் அளவுக்கு இதர தொடர்களிலும் வெளுத்து வாங்கினர். மேலும் உலகக்கோப்பை வாய்ப்புகளிலும் அவர்ள் அடுத்தடுத்த தங்களது சிறப்பான செயல்பாடுகளால் இந்தியாவின் நிரந்தர தொடக்க வீரர்களாக உருவெடுத்தனர்.

ஜொலிக்கும் ஜோடி:
2017இல் தோனி கேப்டனாக விலகிய பின்பும் 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இவர்கள் அடுத்ததாக 2023 உலக கோப்பையிலும் இணைந்து விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் என்னதான் கேஎல் ராகுல் வந்தாலும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் ஷிகர் தவான் தனது மீசையை முறுக்கும் அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். மேலும் ஷிகர் தவானுடன் தமக்கு நல்ல புரிதல் இருப்பதாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி முடிந்த பின் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதேபோல் 9 வருடங்கள் கடந்தும் நாம் வலுவாக விளையாடுகிறோம் என்று சிகர் தவான் தனது டுவிட்டரில் ரோகித் சர்மாவை பாராட்டியுள்ளார். அந்த அளவுக்கு நல்ல புரிதல்களை கொண்டு அனுபவசாலிகளாக திகழும் இவர்கள் நிச்சயமாக அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் ஓப்பனிங் ஜோடியாக விளையாட தகுதியானவர்களே. இவர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தாலும் இவர்களின் திறமையால் தான் இந்த அளவுக்கு வந்துள்ளார்கள் என்பதும் நிதர்சனம்.

மகத்தான முடிவு:
ஆனால் அந்த வாய்ப்பு கொடுத்ததற்காக சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி முடித்ததாக இன்றைய தேதியிலும் அவர்களின் ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனங்களை 2013 முதல் தாங்கிக் கொண்டு இந்தியாவின் நலனுக்காக மகத்தான முடிவை எடுத்த தோனி உண்மையாகவே ரோகித் சர்மா – ஷிகர் தவான் விஷயத்தில் பாராட்டுக்குரியவர்.

அதே மாதிரிதான் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என தற்போதைய இந்திய அணியில் விளையாடும் 80% வீரர்களுக்கு வாய்ப்பளித்த தோனி இன்றைய நல்ல இந்திய எதிர்காலத்துக்கு அன்றே விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டு விதை போட்டார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஒருவேளை 2013இல் சேவாக் – கம்பீர் போன்ற மூத்த வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் அவர் வாய்ப்பளித்தருந்தால் அடுத்த தலைமுறை வீரர்கள் கிடைக்காமல் இந்தியாவும் தற்போதைய இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளாக திண்டாடி கொண்டிருக்கும்.

- Advertisement -
Published by