IND vs RSA : தோனியின் பயணத்தையும் தாண்டி வந்திருப்பது அபாரமானது – தினேஷ் கார்த்திக்கை பாராட்டும் முன்னாள் வீரர்

MS Dhoni vs DInesh Karthik
Advertisement

இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமனில் நிறைவு பெற்றுள்ளது. ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் கடந்த ஜூன் 9இல் தலைநகர் டெல்லியில் துவங்கிய இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுத்த நிலையில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்த தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று சொந்த மண்ணில் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும் சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதாக மண்ணை கவ்வ வைக்க முடியாது என்ற வகையில் கொதித்தெழுந்த இந்தியா அடுத்த 2 போட்டிகளில் பெரிய வெற்றிகளைப் பெற்று தக்க பதிலடி கொடுத்தது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

அதனால் 2 – 2 என சமநிலை பெற்ற இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஜூன் 19 இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்றது. மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு இஷான் கிசான் 15 (7) ருதுராஜ் 10 (12) என சொற்ப ரன்களில் ஏமாற்றியதால் 3.3 ஓவரில் 28/2 என தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் வந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதனால் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

- Advertisement -

கலக்கல் டிகே:
சமீபத்திய ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தான் இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் தூண்களாக இருந்தார்கள். அதிலும் இந்தியாவுக்காக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடியே தீருவேன் என்ற லட்சியத்தில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து 4 – 5 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்தார்.

Dinesh-Karthik

அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு 3 வருடங்கள் கழித்து தாமாக தேடி வந்ததை பயன்படுத்திய அவர் 4 இன்னிங்சில் கடைசி நேரத்தில் களமிறங்கி 92 ரன்களை 158.62 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து டி20 உலக கோப்பையில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அதிலும் ராஜ்கோட் நகரில் நடந்த 4-வது போட்டியில் இந்தியா தடுமாறியபோது 55 (27) ரன்களை தெறிக்க விட்டு வெற்றி பெற வைத்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர், அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் இரட்டை சாதனைகளை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

தோனியை தாண்டி:
கடந்த 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் அப்போதே 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடினார். ஆனால் அதே வருடம் இந்தியாவுக்காக அறிமுகமாகி அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உலக அளவில் கவனம் ஈர்த்து கேப்டனாக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி இருந்த காரணத்தால் இவருக்கு இளமை காலத்தில் பெரும்பாலும் தொடர்ச்சியான வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்காமலேயே போனது. இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் போராடி வந்த இவர் தற்போது 37 வயது கடந்த பின்பும் இந்தியாவுக்காக விளையாடி மிகச் சிறப்பாக செயல்படுவது அபாரமானது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

தென் ஆப்ரிக்க தொடரில் இஷான் கிசான், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பின் தமக்கு பிடித்த 3 வீரராக தினேஷ் கார்த்திக் அற்புதமாக செயல்பட்டதாக பாராட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “3-வதாக தினேஷ் கார்த்திக் வைத்துள்ளேன். அவர் பேட்டிங் செய்யும் இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. அவர் விளையாடி வரும் விதம் அபாரமானது. நீண்ட நாட்களாக விளையாடி தோனியின் மொத்த கேரியர் முடிந்த பின்பும் அவருக்கு இடையே இன்னும் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்”

Aakash Chopra

“வெற்றி பெற வேண்டும் என்ற பசி, போட்டிக்கான திட்டம், எப்படி விளையாடப் போகிறோம் என்ற அனைத்து தெளிவும் அவரிடம் உள்ளது. அவர் கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் பேட்டிங் ஸ்டைலை விட சற்று வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார். அதுதான் கடைசி கட்ட ஓவர்களில் தேவைப்படுகிறது. அவர் கடைசி கட்ட ஓவர்களில் அற்புதமாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன், கிரிக்கெட்டில் அதை விட கடினமான வேலை உலகில் வேறு எதுவுமில்லை” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க : இந்திய அணி வீரர்களோடு அயர்லாந்து பறக்க உள்ள முக்கிய நிர்வாகி. இந்த டிசிஷன் – எதற்கு தெரியுமா?

உலகிலேயே டெத் ஓவர்களில் பேட்டிங் செய்வது கடினம் என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ள தினேஷ் கார்த்திக் அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement