வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரும் ஜூலை மாதம் துவங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த காரணத்தால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத்தொடருக்கான அணியில் புஜாரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். அதே சமயம் ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், முகேஷ் குமார், நவ்தீப் சைனி போன்ற இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதை விட இந்த அணியின் துணை கேப்டனாக மற்றொரு சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே நியமிக்கப்பட்டுள்ளது அவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம். மும்பையை சேர்ந்த அவர் கடந்த 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2015 உலக கோப்பையில் முதன்மை மிடில் ஆர்டர் பேட்ஸ்மனாக விளையாடினார். இருப்பினும் அதன் பின் சற்று மெதுவாக விளையாடியதாலும் ஐபிஎல் தொடரில் தடுமாறியதாலும் அடுத்ததாக முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வெள்ளைப்பந்து அவரை மொத்தமாக கழற்றி விட்டார்.
தோனியின் முடிவு:
ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வந்த ரகானே 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் பொறுப்பின்றி நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக சதமடித்து இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இருப்பினும் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் சஹா, இஷாந்த் சர்மா, புஜாரா ஆகியோருடன் சேர்த்து அவரையும் கழற்றி விட்ட தேர்வுக்குழு ரஞ்சி கோப்பையில் அசத்தினாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு உங்களுக்கு வாய்ப்பு தர மாட்டோம் என்று தெரிவித்தது. அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் மனம் தளராமல் ரஞ்சி கோப்பையில் விளையாடி இரட்டை சதமடித்தாலும் ரகானேவுக்கு இந்தியாவின் வாய்ப்பு எட்டாவதாகவே இருந்தது.
அந்த நிலையில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரிலும் பெரும்பாலான அணிகள் வாங்குவதற்கு யோசித்த போது அவரிடம் இன்னும் திறமை இருப்பதாக கணித்த தோனி அடிப்படை விலைக்கு வாங்கி தமது அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக சர்வதேச அளவில் ஏற்கனவே ஓரளவு நல்ல வீரராக வளர்வதற்கு காரணமாக இருந்த அவருக்கு ரகானே எந்தளவுக்கு திறமையானவர் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மறுபுறம் தன்னை நம்பி கொடுத்த வாய்ப்பில் சரவெடியாக செயல்பட்ட ரகானே வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி ஃபைனல் வரை அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அந்த நிலைமையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வு செய்யலாமா என்று கேட்ட போது 3 உலகக் கோப்பைகளை வென்ற தோனி பச்சைக்கொடி காட்டிய பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தேர்வுக்குழு ரகானேவை தேர்வு செய்தது.
அதைத்தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற ஃபைனலில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் குவித்து குறைந்தபட்சம் இன்னிங்சிலும் தோல்வியிலிருந்து காப்பாற்றிய ரகானே 2வது இன்னிங்ஸிலும் 46 ரன்கள் எடுத்து முடிந்த வரை இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். ஏற்கனவே 10 வருடத்திற்கு மேலாக விளையாடி 2018 முதல் தொடர்ந்து துணைக் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டிருந்த ரகானே நல்ல ஃபார்மில் இல்லாதது மட்டுமே குறையாக இருந்தது.
இதையும் படிங்க:IND vs WI : ரோஹித் சாதிச்சுட்டாரா? மொத்த பழியையும் அவர் மேல போட்டு ஏன் கழற்றி விட்டீங்க – தேர்வுக்குழுவை விளாசிய கவாஸ்கர்
அதனால் தற்போது ஃபார்மை பெற்றுள்ள அவர் மீண்டும் இழந்த தன்னுடைய இடத்தையும் துணை கேப்டன்ஷிப் பதவியையும் பெற்று வலுவான கம்பேக் கொடுத்ததற்கு 2023 தொடரில் தோனி அவரை வாங்கிய முடிவே முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். சொல்லப்போனால் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பதற்கு தோனி மற்றும் சென்னை நிர்வாகம் உதவியதாக ஐபிஎல் தொடரின் போதே ரகானே தமது வாயால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.