IPL 2023 : பாதியில் நின்ற போட்டி, விடாப்பிடியாக நின்று ரூல்ஸை சிஎஸ்கே’வுக்கு சாதகமாக்கிய தல தோனி – நடந்தது என்ன?

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் முன்னாள் சாம்பியன் சென்னையை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சவாலான பிட்ச்சில் போராடி 20 ஓவர்களில் 172/7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு துபே 1, ரகானே 17, ராயுடு 17, ரவீந்திர ஜடேஜா 21, தோனி 1 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

இருப்பினும் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் அதிகபட்சமாக 60 (44) ரன்களும் டேவோன் கான்வே 40 (33) ரன்களும் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மாவின் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத்துக்கு அதே கடினமான பிட்ச்சில் ஆரம்ப முதலே சென்னை பவுலர்கள் துல்லியமாக பந்து வீசியதால் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய அந்த அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர்.

- Advertisement -

தோனியின் சாதூரியம்:
குறிப்பாக சஹா 12, கேப்டன் பாண்டியா 8, தசுன் சனாக்கா 8, டேவிட் மில்லர் 4, விஜய் சங்கர் 14 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சுப்மன் கில் 42 (38) ரன்களும் ரசித் கான் 30 (16) ரன்களும் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், பதிரான, தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை மே 28இல் நடைபெறும் ஐபிஎல் 2023 தொடரின் மாபெரும் இறுதி போட்டிக்கு நேரடியாக வரலாற்றில் 10வது முறையாக தகுதி பெற்ற சாதனை படைத்தது.

முன்னதாக அப்போட்டியில் 15வது ஓவரின் முடிவில் நடுவர்களுடன் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் 5 நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது. குறிப்பாக அந்த சமயத்தில் ஏன் போட்டி நிறுத்தப்பட்டது என்பது தெரியாமல் நிறைய ரசிகர்கள் குழப்பமடைந்தனர். அதற்கான காரணம் என்னவெனில் 15வது ஓவரின் முடிவில் 3 ஓவர்கள் மீதம் வைத்திருந்த பதிரனாவை பந்து வீச தோனி அழைத்தார். ஆனால் அதற்கு முந்தைய சில ஓவர்களில் சில நிமிடங்கள் ஓய்வெடுப்பதற்காக திரும்பிய பெவலியன் சென்ற பதிரனா 9 நிமிடங்கள் வரை அங்கேயே இருந்து தாமதமாக களத்திற்குள் வந்தார்.

- Advertisement -

ஆனால் அடிப்படை விதிமுறைப்படி தற்காலிக இடைவெளி எடுப்பதற்காக 4 நிமிடங்களுக்கு மேல் பெவிலியனில் இருக்கும் வீரர் மீண்டும் களமிறங்கி 4 நிமிடங்கள் முடியும் வரை பந்து வீச முடியாது. அதை சுட்டி காட்டிய நடுவர்கள் பதிரான பந்து வீசுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் டெத் ஓவர்களில் அவரை வீசுவதற்காகவே ஏற்கனவே மிச்சப்படுத்தி வைத்திருந்த தோனி நடுவர்கள் சொன்ன காரணத்தை கேட்டு வேறொரு பவுலரை பயன்படுத்தவில்லை. மாறாக நடுவர்கள் கூறிய நேரம் முடியும் வரை அவர்களிடம் பேசிக் கொண்டே காலத்தை கடத்தினார்.

அதனால் சுமார் 5 நிமிடங்கள் வரை தாமதமான அந்த சமயத்தில் பதிரனா பந்து வீசுவதற்கான நேரமும் வந்ததால் தோனி திட்டமிட்டது போல் அவரையே பந்து வீசுவதற்கு நடுவர்களும் அனுமதித்தனர். அதைப் பார்த்த எதிரணி ரசிகர்கள் தோனி போன்ற ஒருவர் இப்படி செய்ததால் நடுவர்கள் எதுவும் சொல்லவில்லை என்று விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க:GT vs CSK : ஃபைனல் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த சிஎஸ்கே – குறைந்த ஸ்கோருடன் குஜராத்தை வீழ்த்தியது எப்படி?

இருப்பினும் உண்மை என்னவெனில் அந்த தாமத்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால் அதற்கு தண்டனையாக ஒரு ஃபீல்டர் குறைவு மற்றும் அபராதத்தை ஏற்றுக்கொள்ள தயார் ஆனால் எத்தனை நிமிடம் ஆனாலும் பதிரனா தான் அடுத்த ஓவர் வீச வேண்டும் என்று தோனி விடாப்பிடியாக நின்றார். அதனாலேயே அந்த சமயத்தில் நடுவர்களும் குறிப்பிட்ட நிமிடம் முடியும் வரை காத்திருந்து அனுமதித்தனர். நல்ல வேலையாக இறுதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் 20 ஓவர்களை வீசி முடித்தது.

Advertisement