விராட் கோலியை மிஞ்சினாரா? தல தோனியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பட்டியல் வெளியீடு – விவரம் இதோ

Dhoni-Entertainment
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான வெள்ளைப் பந்து உலகக் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தானவராக போற்றப்படுகிறார். அதே போல மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து அதிரடியாக விளையாடி இந்திய விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றிய அவர் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் மிகச் சிறந்த ஃபினிஷராக கருதப்படுகிறார். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இப்போதுள்ள வீரர்கள் உருவாவதற்கு அப்போதே வாய்ப்பு கொடுத்த வளர்த்த அவர் இந்தியாவின் வருங்காலத்தை வளமாக கட்டமைத்த பெருமைக்குரியவர் என்றே சொல்லலாம்.

அத்துடன் ஐபிஎல் தொடரிலும் 2008 முதல் சென்னை அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வரும் இந்த சீசனில் 41 வயதில் அட்டகாசமாக கேப்டன்ஷிப் செய்து 5வது கோப்பையை வெற்றிகரமான கேப்டன் என்ற மகத்தான சாதனையை படைத்தார். அப்படி பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அவருக்கு நேற்று ஏராளமான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் 42வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சுமார் கடந்த 20 வருடங்களாக சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி பல சாதனைகளை படைத்த தோனி அதற்கு நிகரான வருமானங்களையும் சம்பாதித்துள்ளார்.

- Advertisement -

சொத்து மதிப்பீடு:
குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் அவர் வாகனங்கள் பிரியர் என்பதால் தம்முடைய வீட்டில் நிறைய கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் எம்எஸ் தோனியின் மொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக 1000 கோடிகளை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் விளம்பரங்களின் வாயிலாக 1 – 2 கோடி ரூபாய் அவருக்கு வருமானமாக கிடைக்கிறது.

இருப்பினும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவுக்கு 8.9 கோடிகளை வாங்கும் விராட் கோலியை விட இது மிகவும் குறைவாகும். அது மட்டுமல்லாமல் 9 வெவ்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் தோனி நிறைய கோடிகளை முதலீடு செய்து சம்பாதிக்கிறார். அது போக மஹி ரெசிடென்சி எனும் ஹோட்டல் நிறுவனத்தையும் தோனி என்டர்டைன்மென்ட் என்ற சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவதன் வாயிலாகவும் அவருக்கு வருமானங்கள் கிடைக்கின்றன.

- Advertisement -

அது போக ஜியோ சினிமா போன்ற 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்படும் தோனி அதிலிருந்து தலா 4 முதல் 6 கோடி வருமானத்தை பெறுகிறார். மேலும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் கால்பந்து லீக் தொடரில் சென்னை உட்பட 6 விளையாட்டு அணி நிறுவனங்களில் தோனி ஒரு உரிமையாளராக இருக்கிறார். அத்துடன் தம்முடைய சொந்த ஊரான ராஞ்சியில் 2 சொகுசு பங்களாவை கொண்டுள்ள தோனி விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளையும் வைத்துள்ளார்.

மேலும் 2019 உலக கோப்பையுடன் இந்தியாவுக்காக ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் சென்னை அணியிலிருந்து 12 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார். இப்படி அனைத்து விதமான வருமானங்களையும் சேர்த்து எம்எஸ் தோனியின் மொத்த சொத்து மதிப்பு 1040 கோடியாக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்க டி20 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் திடீரென வெளியேறிய ராயுடு – ரசிகர்கள் கோபம், காரணம் என்ன?

ஆனால் இந்தியாவின் உச்சகட்ட நட்சத்திரமாக இருக்கும் விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு 1050 கோடி என்ற நிலையில் அவரை விட தோனி 10 கோடி குறைவான மதிப்பையே கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் தோனி முழங்கால் வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வரும் நிலையில் அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement