
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பாகிஸ்தானை 146 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இந்தியா 19.4 ஓவரில் 150/5 ரன்களை அடித்து போராடி 9வது முறையாக ஆசியக் கோப்பை வென்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24 சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் இத்தொடரில் தொடர்ந்து 3வது முறையாக பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.
முன்னதாக அந்தப் போட்டியின் முடிவில் வழக்கம் போல பரிசளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழா மேடையில் இந்திய வாரியத்தின் சார்பில் யாருமே பங்கேற்கவில்லை. குறிப்பாக பாகிஸ்தானால் 26 இந்தியர்கள் இயற்கை எய்தியருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிசிசிஐ சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் வாரிய நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி மேடையில் நின்று பாகிஸ்தான் வீரர்களுக்கு ரன்னர்-அப் மெடலை வழங்கினார். அடுத்ததாக இந்திய அணி அவரிடம் பரிசுகளை வாங்குமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியத்தின் தலைவரான அவருடைய கையில் மெடலையும் கோப்பையும் வாங்க முடியாது என்று சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தெரிவித்து விட்டது.
அதனால் ஏமாற்றம் மற்றும் அவமானத்துடன் மோசின் நக்வி அங்கிருந்து நடையைக் கட்டினார். அதே சமயம் தம்முடைய கையால் பரிசை வாங்க மறுத்த இந்திய அணியை பழி தீர்க்க அவர் ஆசியக் கோப்பையை தம்முடைய கையோடு எடுத்துச் சென்றார். குறிப்பாக கோப்பையை அங்கிருந்த ரவி சாஸ்திரி போன்ற வேறொருவர் கையில் கொடுத்து வழங்கச் சொல்லாத அவர் “இந்தியா எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து விடுகிறேன்” என்ற வகையில் கோப்பையுடன் வெளியேறினார்.
இதையும் படிங்க: 9வது முறை.. பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் அடி.. அக்தர் முகத்தில் கரியை பூசிய இந்தியா.. ஆசிய சாம்பியனாகி சாதனை
மறுபுறம் அதற்கெல்லாம் அசராத இந்திய அணி கோப்பையை வாங்கி வென்றது போல கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தனர். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை ரிக் ஃபிளைர் போல கேப்டன் ரோஹித் சர்மா மெதுவாக நடந்து வந்து வாங்கி கொண்டாடியதை மறக்க முடியாது. அதே போல ஹர்டிக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் கொடுத்த ஐடியாவை பின்பற்றிய சூரியகுமார் மெதுவாக நடந்து வந்து கோப்பையை வாங்கி கொண்டாடுவது போல இந்திய அணியுடன் வெற்றியைக் கொண்டாடினார்.