பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே ஜிம்பாப்வே, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற கத்துக்கட்டிகளிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் தற்சமயத்தில் அந்த அணி மிகப்பெரிய விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. இந்த நிலைமையில் அடுத்த வருடம் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்த உள்ளது.
கடைசியாக கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது தான் முதல் முறையாக பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு ஐசிசி தொடரை நடத்த உள்ளது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்காக அந்நாட்டு வாரியம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
தலைவர் கவலை:
இந்நிலையில் தங்கள் நாட்டில் உள்ள மைதானங்களில் ரசிகர்கள் அமரும் இருக்கை, பாத்ரூம் போன்ற அடிப்படை வசதிகள் கூட நன்றாக இல்லை என்ற அவலத்தை பாகிஸ்தான் வாரிய தலைவர் மோசின் நக்வி கவலையுடன் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவற்றை முன்னேற்றுவதற்காக 12.8 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயில் மைதானங்களை முன்னேற்றுவதற்கான வேலை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் கடவுளின் ஆசிர்வாதத்தால் சாம்பியன்ஸ் டிராபியை வெற்றிகரமாக நடத்துவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலகில் உள்ள மற்ற மைதானங்களுக்கும் நம்முடைய மைதானங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நமது மைதானங்கள் சர்வதேச தரத்துக்கு நிகராக இல்லை. ஏனெனில் அதில் இருக்கைகள் சரியாக இல்லை. பாத்ரூம் வசதிகள் போதுமானதாக இல்லை”
“பெவிலியனில் இருந்து பார்க்கும் போது களம் 500 மீட்டர் தொலைவில் இருப்பது போல மைதானம் தெரிகிறது. எனவே அதை சரி செய்ய கட்டிடக் கலை வேலைப்பாடு குழு இரவும் பகலுமாக உழைத்து வருகிறது. எங்கள் மைதானங்களை உலகின் சிறந்த ஒன்றாக மாற்றுவோம். மைதானங்களில் அடிப்படை வசதிகள் வழங்குவதே எங்களது முன்னுரிமை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடக்கும்”
இதையும் படிங்க: அது வரைக்கும் விளையாடுவாரு.. மகத்தான விராட் கோலி கிங் இல்லன்னு அவரே சொல்வாரு.. பசித் அலி கருத்து
“ஃபைனல் லாகூர் நகரில் நடைபெறும். சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் என்று கடவுள் ஆசிர்வாதித்துள்ளார். அதற்கான தேதிகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் பாகிஸ்தான் வாரியம் தொடர்ந்து வேலை செய்து வருகிறது” என்று கூறினார். இதற்கிடையே பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



