ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக ஃபைனல் உட்பட பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளுடன் கோப்பையை வென்றது.
இருப்பினும் போராடி வென்ற கோப்பையை ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி இந்திய அணிக்கு கொடுக்காமல் எடுத்துச் சென்றார். அதாவது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக அத்தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியினர் கைகுலுக்காமல் வெளியேறினார்கள்.
இந்தியாவுக்கு கண்டிஷன்:
அத்துடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவராக இருக்கும் மோசின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க முடியாது என்றும் இந்திய அணி மறுத்து விட்டது. அதனால் அவமானப்பட்ட மோசின் இந்தியா எப்படி வெற்றியைப் கொண்டாட போகிறார்கள்? என்பதைப் பார்ப்பதற்காக கையோடு கோப்பையை எடுத்துச் சென்றார். அதற்காக மனம் தளராத இந்திய அணியினர் கையில் கோப்பை இருப்பது போல் கொண்டாடி அவருக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து கோப்பையை முறைப்படி இந்தியாவுக்கு கொடுக்குமாறு நக்விக்கு பிசிசிஐ கடிதம் எழுதியது. இல்லையெனில் நவம்பர் மாதம் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் புகார் செய்வோம் என்றும் இந்தியா எச்சரித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு கோப்பை வேண்டுமெனில் நவம்பர் 10ஆம் தேதி சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணியை துபாய்க்கு அழைத்து வருமாறு பிசிசிஐக்கு மோசின் நக்வி பதிலளித்துள்ளார்.
என் கையால் வாங்கிட்டு போங்க:
ஆனால் கோப்பை தம்முடைய கைகளால் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதமானால் வருமாறு அழைப்பு விடுத்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிசிசிஐயிடம் இருந்து தொடர்ச்சியாக கடிதங்கள் வந்தன. அதற்கு துபாயில் நவம்பர் 10ஆம் தேதி பிரத்யேக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரி ராஜீவ் சுக்லாவிடம் கோப்பையை கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று ஆசியக் கவுன்சில் பதிலளித்துள்ளது”
இதையும் படிங்க: 2வது ஒன்டே நடைபெறும் அடிலெய்ட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“அதற்கான சிறப்பு விழா துபாயில் நவம்பர் 10 ஆம் தேதி நடத்திக் கொள்ளலாம் என்று பிசிசிஐக்கு ஆசியக் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. அங்கே உங்களுடைய கேப்டன் மற்றும் வீரர்களை அழைத்து வந்து என்னிடம் கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். அதை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளாது என்பதால் ஐசிசியிடம் புகார் செய்யும் என்று உறுதியாகத் தெரிவது குறிப்பிடத்தக்கது.



