
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இன்று தரம்சாலா நகரில் துவங்கி நடைபெறவுள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரரான விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் காயம் அடைந்த விராத் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது துவக்கத்தில் இடம்பெற்று இருந்தாலும் அவரது காயத்தை கணக்கில் கொண்டு சரியான ஓய்வு அளிக்க வேண்டும் என்பதனால் அணியில் இருந்து விலக்கப்பட்டார். அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் விராட் கோலியின் இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் விராட் கோலியின் இடம் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளதால் தற்போது மற்ற வீரர்களுக்கு அந்த இடத்தில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நிறைய காம்பினேஷன்களை நம்மால் செயல்படுத்த முடியும்.
இஷான் கிஷன், கே.எல் ராகுல் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு வாய்ப்பினை வழங்கலாம். ஆனாலும் அந்த இடத்தில் சிறப்பாக செயல்படும் ஒரு வீரருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று மோர்னே மோர்கல் கூறியுள்ளார். இப்படி விராட் கோலியின் இடத்திற்கு மூன்று பேரை அவர் முன் மொழிந்திருந்தாலும் இஷான் கிஷனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இந்த ஒரு ஸ்ட்ரென்த் போதும்.. இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம் – ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி
ஏனெனில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக மட்டுமே விளையாடிய அனுபவம் உடையவர். அதேபோன்று கே.எல் ராகுல் தற்போது ஐந்தாவது இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவர்களது இடத்தை மாற்ற முடியாது என்பதனால் டி20 போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் இஷான் கிஷனுக்கு ஒருநாள் போட்டியிலும் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.