இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதால் அவருடன் சேர்த்து பேட்டிங் பேச்சாளரான விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே ஆகியோர் கூட்டாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் தற்போது இந்திய அணியின் முதன்மைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
மேலும் கௌதம் கம்பீரின் பக்கபலமாக அவருக்கு ஆதரவு உடைய நபர்களையே பேட்டிங் பயிற்சியாளராகவும், பந்துச்சு பயிற்சியாளராகவும் நியமிக்க அவர் கேட்டுக்கொண்டார். அந்த வகையில் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் இருந்து வரும் வேளையில் பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
கௌதம் கம்பீரின் வலுவான ஆதரவு காரணமாகவே இவர் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முன்னதாக இந்த பதவிக்கு முன்னாள் வீரர்களான பாலாஜி, வினய் குமார், ஜாகீர் கான் ஆகியோரது பெயர் பரிசீலனையில் இருந்தாலும் மோர்கலுக்கே கம்பீரின் ஆதரவு வலுவாக இருந்தது.
இந்நிலையில் தற்போது மோர்கல் இந்திய அணியின் பந்துச்சு பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் அடுத்த சில மாதங்களிலேயே அவர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளார். ஏனெனில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள், நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் என 10 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து விளையாட இருக்கிறது.
இப்படி அடுத்தடுத்த 10 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி ஆக வேண்டிய சவாலை அவர் எதிர்கொள்ள உள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தாலும் அவரது பயிற்சியின் கீழ் இன்னும் பலமடைய வேண்டும் என்பதே பலரது ஆவலாக உள்ளது.
இதையும் படிங்க : துலீப் கோப்பை 2024 : ருதுராஜ், கில் தலைமையில் இந்திய வீரர்கள் மோதல்.. அட்டவணை, எந்த சேனலில் பார்க்கலாம்
கடந்து 2006-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமான அவர் 86 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கொல்கத்தா அணியில் கம்பீருடன் சேர்ந்து விளையாடிய மோர்னே மோர்கல் அதன் பின்னர் லக்னோ அணியில் கம்பீர் பயிற்சியாளராக இருந்த போதும் அவருடன் பணியாற்றினார். இதன் காரணமாகவே அவர் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



