இந்தியா – வங்கதேசம் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட அப்போட்டியில் முதல் நாள் முடிவில் வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்தது. அடுத்த 2 நாட்கள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் நான்காவது நாளில் அதிரடியாக பந்து வீசிய இந்திய அணி வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டியது.
அதன் பின் பேட்டிங்கில் சரவெடியாக விளையாடிய இந்தியா 34.4 ஓவரில் 285-9 ரன்களை 8.22 ரன்ரேட்டில் குவித்து உலக சாதனை படைத்து டிக்ளர் செய்தது. அத்துடன் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாகவும் இந்தியா 5 உலக சாதனைகளை படைத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, கே.எல். ராகுல் 68, விராட் கோலி 47 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவின் திட்டம்:
அதைத் தொடர்ந்து விளையாடும் வங்கதேசம் நான்காவது நாள் முடிவில் 26-2 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் 26 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா 5வது நாளில் விரைவாக வங்கதேசத்தை சுருட்டி இலக்கை சேசிங் செய்து வெற்றிக்கு போராட தயாராகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் முடிந்தளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்று கௌதம் கம்பீர் திட்டமிட்டதாக பவுலிங் மோர்னே மோர்கெல் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை களத்தில் செய்வதற்கு ரோஹித் சர்மா போன்ற கேப்டன் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த திட்டத்தில் தனது முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட ரோஹித் மொத்த இந்திய அணியும் அதிரடியாக விளையாடுவதற்கான அடித்தளத்தை அமைத்ததாகவும் மோர்கல் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அதிரடி கேப்டன் ரோஹித்:
“கௌதம் கம்பீர் கண்ணோட்டத்திலும் நாங்கள் முடிந்தளவுக்கு போட்டியை வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல முடிவெடுத்தோம். அதை முன்னோக்கி நின்று செய்ய உங்களுக்கு ஒரு லீடர் தேவை. அதை பலமுறை செய்தது போல் இன்றும் ரோஹித் செய்தார். குறிப்பாக பந்து எப்படி வரும் என்று தெரியாத பிட்ச்சில் முதல் பந்திலேயே அவர் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்டார்”
இதையும் படிங்க: சென்னையில் இந்த விடயம் நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி.. நான் எமோஷனல் ஆயிட்டேன் – ரிஷப் பண்ட் உருக்கம்
“அப்படி விளையாடும் போது எப்படிப்பட்ட எதிரணியும் ஒரு கால் பின்னே வைக்கும். எனவே எங்களுடைய கேப்டன் முன்னோக்கி அணியை எடுத்துச் சென்றதைப் பார்த்தது நன்றாக இருந்தது. அவரின் அதிரடி பேட்டிங் அற்புதம். வங்கதேசம் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பது எங்களுடைய திட்டத்தின் ஒரு அங்கமாகவே இருக்கிறது” என்று கூறினார்.



