இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியை 3வது போட்டியில் இங்கிலாந்து தோற்கடித்தது. இருப்பினும் 4வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* என்ற கணக்கில் கடைசிப் போட்டிக்கு முன்னதாகவே கோப்பையை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக இந்தத் தொடரின் 3வது போட்டியில் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடியது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் குணமடைவதற்கு 14 மாதங்கள் எடுத்துக் கொண்டார். அவர் விளையாடாதது கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியடைய வித்திட்டது.
ஷமி காயமா:
இருப்பினும் முழுமையாக குணமடைந்த ஷமி சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் 100% ஃபிட்டாக மாறினார். அதன் காரணமாக இத்தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடாத போதிலும் 3வது போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் விக்கெட்டுகள் எடுக்காத அவர் நான்காவது போட்டியில் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
மேலும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி விரைவில் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அவர் காயத்தை சந்தித்து விட்டாரா? என்ற அச்சத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அணியின் கலவைக்காகவும் ஓய்வை கருத்தில் கொண்டும் ஷமி 4வது போட்டியில் விளையாடவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
மோர்கெல் விளக்கம்:
“ஷமி நன்றாக பவுலிங் செய்து வருகிறார். அவரை வலைப் பயிற்சியில் நான் பார்த்து வருகிறேன். அவர் எங்களுடன் விளையாடுவது மகிழ்ச்சி. அவருக்கு அடுத்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம். அதற்கு விஷயங்கள் எப்படி செல்கிறது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். ஆனால் அவர் மீண்டும் எங்களுடைய அணியில் வந்ததில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறோம்”
இதையும் படிங்க: 242 ரன்ஸ்.. இலங்கைக்கு ஃபாலோ ஆன் கொடுத்து ஓடவிட்ட ஆஸி.. 43 வருட மெகா சாதனை வெற்றி
“விளையாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் பயிற்சியில் அவருடைய அனுபவத்தையும் அறிவையும் கொடுப்பதே எங்களுடைய இளம் பவுலிங் துறைக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் பெரிய புத்துணர்ச்சியைக் கொடுக்கும். எனவே ஷமி மீண்டும் அணியில் வந்தது சிறப்பான விஷயம்” என்று கூறினார். இந்த நிலையில் இந்தியா தொடரை வென்று விட்டதால் கடைசி போட்டியிலும் அவருக்கு ஓய்வு கொடுத்து அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கு இந்திய அணி தயார் படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.



