242 ரன்ஸ்.. இலங்கைக்கு ஃபாலோ ஆன் கொடுத்து ஓடவிட்ட ஆஸி.. 43 வருட மெகா சாதனை வெற்றி

AUS vs SL
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 29ஆம் தேதி ஃகால் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அற்புதமாக விளையாடி இலங்கையை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்து 654-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக இலங்கை மண்ணில் இரட்டை சதத்தை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்த உஸ்மான் கவாஜா 232 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்மித் தன்னுடைய 10000வது ரன்னை தாண்டி சதத்தை அடித்து 141 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஓடவிட்ட ஆஸ்திரேலியா:

அதே போல மிடில் ஆர்டரில் தம்முடைய பங்கிற்கு இலங்கையை நொறுக்கிய அறிமுக வீரர் ஜோஸ் இங்லீஷ் சதத்தை அடித்து 102 (94) ரன்கள் எடுத்தார். இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கையை அபாரமாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 165 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்யூ குனேமான் 5, நேதன் லயன் 3 விக்கெட்டுகளை எடுத்து சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தினர். அடுத்ததாக மீண்டும் பேட்டிங் செய்யுமாறு இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பிலும் சுமாராகவே விளையாடிய இலங்கை 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

மெகா வெற்றி:

அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 41, ஜெஃப்ரி வேண்டர்சே 53 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மீண்டும் மேத்தியூ குனேமான் 4, நேதன் லயன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிராக எந்தவொரு பவுலரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் – விவரம் இதோ

அத்துடன் இலங்கைக்கு எதிராக ஒட்டுமொத்தமாகவும் அதன் மண்ணில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியா 2 சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1983ஆம் ஆண்டு கண்டி மைதானத்தில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய பெரிய வெற்றி. தற்போது அந்த 42 வருட சாதனையை உடைத்துள்ள ஆஸ்திரேலிய அணி இலங்கையில் மெகா வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2017 நாக்பூர் போட்டியில் இந்தியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்களில் தோற்றதே முந்தைய மோசமான சாதனை.

Advertisement