இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. வழக்கம் போல இம்முறையும் பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
அவருக்கு பிரசித் கிருஷ்ணா, சிராஜ் ஆகியோர் உறுதுணையாக செயல்பட தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி 4வது பவுலராக இங்கிலாந்துக்கு எதிராக முக்கிய நேரங்களில் மேஜிக் பந்துகளை வீசி சவாலைக் கொடுப்பார் என்று பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார். இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
மேஜிக் பவுலர்:
“நிதிஷ் ரெட்டி திறமையானவர் என்று நினைக்கிறேன். அவரால் அந்த மேஜிக் பந்தை வீச முடியும். இவை அனைத்தும் சீரான நிலையை கட்டமைப்பதைப் பற்றியதாகும். அதில் தான் நாங்கள் வேலை செய்து வருகிறோம். அவருடைய விளையாட்டுக்கு அது முக்கியமானது. பேட்டிங்கில் நிதிஷ் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியும்”
“ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகளில் பந்து வீச்சு துறையில் அவரால் ஏதாவது எங்களுக்கு கொடுக்க முடியுமேயானால் எங்களுக்கு அவர் உற்சாகத்தை கொடுக்கக்கூடிய ஆப்ஷனாக இருப்பார். அணியின் சமநிலையைப் பொறுத்த வரை நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே சமயம் பவுலிங் துறையில் எக்ஸ்ட்ரா கியரை கண்டறிவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிக்கான சாவியாகும்”
மோர்கெல் நம்பிக்கை:
“டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் நீண்ட காலமாக விளையாடவில்லை. இங்கிலாந்தில் குறிப்பாக மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலைகள் எங்களுடைய பவுலர்களுக்கு பொருத்தலாம். ஆனால் இங்கேயும் உங்களுக்கு பேட்டிங் செய்வதற்கு சாதமான சூழ்நிலைகள் கிடைக்கும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கூர்மையாக இருக்க ஃபிட்னஸ் அவசியம். அதில் தான் நாங்கள் வேலை செய்து வருகிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்த காரணத்தால் இந்தியாவின் கேப்டனாக வேண்டிய கோலியை.. இப்படி செய்யலாமா? பிசிசிஐ’யை விளாசிய சாஸ்திரி
கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி மெல்போர்னில் சதத்தை அடித்து வெற்றிக்காக போராடினார். அத்தொடரில் 2 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் தற்போது இன்னும் கூடுதலான அனுபவத்தைப் பெற்றுள்ளார். எனவே தம்முடைய அறிமுக இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம்.



