இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த மெகா தொடரில் இரு அணிகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் சிராஜை தவிர்த்து யாருமே முழுமையாக 5 போட்டிகளில் விளையாடவில்லை. குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளுக்கு மேல் விளையாட முடியாமல் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆனால் முதல் போட்டியிலிருந்தே இந்தியாவுக்காக ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து விளையாடிய 180க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசி வெற்றிக்காக போராடினார். அதற்கு நிகராக இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக பொதுவாக கிண்டல்களை சந்திக்கக்கூடிய சிராஜ் இத்தொடரில் பலருடைய பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
உழைப்பாளி சிராஜ்:
இந்நிலையில் இத்தொடரில் இந்தியாவுக்காக அனைத்து நாட்களும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கு முகமது சிராஜ் தயாராக இருந்ததாக பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் பாராட்டியுள்ளார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேச பேச முடியாத சிராஜ் செயலில் தம்முடைய திறமைகளைக் காண்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி கடினமாக உழைக்கும் சிராஜுக்கு ஒரு வழியாக அனைவரிடமும் பாராட்டு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி மோர்கெல் பேசியது பின்வருமாறு. “சிராஜ் தனக்கான அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் பெறுவதற்காக நான் மகிழ்ச்சியடைவதாக இத்தொடரின் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தேன். அவர் எங்களுடைய உடை மாற்றும் அறையில் முன்னின்று நடப்பவர். இயற்கையான லீடர். குரலால் நன்றாக பேசாவிட்டாலும் தன்னுடைய செயலால் அவர் அவர் முன்னின்று நடக்கக்கூடியவர்”
மோர்கெல் பாராட்டு:
“இந்தத் தொடரில் யாரேனும் ஒருவர் தன்னுடைய கையை உயர்த்தி விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டிய சூழ்நிலை வந்த போதெல்லாம் சிராஜ் நன்றாக செயல்பட்டுள்ளார். வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எக்ஸ்ட்ரா 2 – 3 ஓவர்களை வீச வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் சிராஜ் அதை எங்களுக்காக செய்தார். அப்படி தனது முயற்சிகளைப் போடும் அவருக்கு பரிசாக விக்கெட்டுகள் கிடைப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது”
இதையும் படிங்க: மைதானத்தில் அமர்ந்திருந்த பார்வையாளரின் டி ஷர்ட்டை மாற்றச்சொன்ன ரவீந்திர ஜடேஜா – என்ன நடந்தது?
“கடைசி போட்டியில் கூட முக்கியமான தருணங்களில் அவர் எங்களை உயர்த்தினார். அது போன்ற சாதுரியமான விளையாட்டு உங்களுக்கு தேவை. அந்த இடங்களில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டார். பணிச்சுமையைப் பற்றி பேசும் போதெல்லாம் என்னுடைய நாட்டுக்காக நான் விளையாடி வெற்றி பெற வேண்டும், அனைத்து நாட்களிலும் ஓட வேண்டும் என்று சிராஜ் தெரிவிப்பார். அப்படிப்பட்ட அவருக்கு இவ்வளவு விக்கெட்டுகள் கிடைத்தது எனக்கு ஆச்சரியமில்லை” எனக் கூறினார்.



