
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என போராடி சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. முன்னதாக அத்தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக பேட்டிங் செய்தார்.
கடந்த 2021 முதலே சிறப்பாக விளையாடி வரும் அவர் இத்தொடரில் இந்தியாவுக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார். அதனால் ரிக்கி பாண்டிங், சங்ககாரா, பிரைன் லாரா, ஜேக் காலிஸ் போன்ற ஜாம்பவான்களை முந்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனைப் படைத்துள்ளார். இதுவரை அவர் 158 போட்டிகளில் 13543 ரன்களை 51.29 சராசரியில் குவித்துள்ளார்.
அதனால் 15921 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனையை அவர் முறியடிப்பாரா என்ற கேள்வி காணப்படுகிறது. சொல்லப்போனால் 34 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் சச்சினை தாண்டுவதற்கு இன்னும் 2378 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் சச்சின் சாதனையை அவர் கண்டிப்பாக முறியடிப்பார் என்று பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். மேலும் தம்முடைய கேரியர் முடியும் போது ரூட் 18000 ரன்கள் குவித்திருப்பார் என்றும் அவர் கணித்துள்ளார். அந்த வகையில் 16000, 17000, 18000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சச்சினால் முடியாத சாதனைகளை ரூட் படைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி பனேசர் பேசியது பின்வருமாறு. “அந்த சாதனையை ரூட் உடைத்து முன்னோக்கி செல்வார். அனேகமாக அவர் தன்னுடைய கேரியரை 18,000 ரன்கள் அடித்து முடிப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு தற்போது 34 வயது மட்டுமே ஆகிறது அல்லவா? அதனால் அவர் இன்னும் 6 வருடங்கள் விளையாடுவார்”
இதையும் படிங்க: நீங்க முடிவு எடுத்தாலும்.. எனக்கு விருப்பமில்ல.. முக்கிய முடிவை கையிலெடுத்த சஞ்சு சாம்சன் – கலக்கத்தில் ராஜஸ்தான்
“அந்த 6 வருடங்களில் அவர் சுமார் 4000 – 5000 ரன்கள் அடிப்பார். சச்சின் 40 வயது வரை விளையாடினார். அதே போல ரூட்டும் 40 வயது வரை விளையாடுவார். எனவே அந்த உலக சாதனையை அவர் முறியடித்து முன்னோக்கிச் செல்வார். என்னைக் கேட்டால் அவர் 18000 டெஸ்ட் ரன்கள் அடித்து கேரியரை முடிப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.