ஆஷஸ் 2025/26 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் 4வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியிலிருந்து தப்பியது.
அதுமட்டுமின்றி 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு விட்டது. இருப்பினும் அந்த வெற்றியை இங்கிலாந்து வெறும் 2 நாளில் பெற்றது விவாத பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் துவங்கிய அப்போட்டி அடுத்த நாளே முடிந்தது.
இந்தியாவை திட்டியவர்கள்:
அந்தளவுக்கு மெல்போர்ன் பிட்ச் வேகத்துக்கு சாதகமாகவும் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் இருந்தது. அதனால் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தது. அதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் மெல்போர்ன் மைதானத்தில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்த முதல் போட்டி என்ற பெயரையும் அப்போட்டி பெற்றது.
இந்நிலையில் கடந்தக் காலங்களில் இந்தியாவில் முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் விழுந்த போதெல்லாம் இந்தியா ஒரு தலைப்பட்சமாக வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்திருந்ததாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் திட்டித் தீர்த்தார்கள். அன்று இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று ஆஸ்திரேலியாவையும் விமர்சிக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். ஏனெனில் அது போன்ற போட்டிகள் அழிந்து கொண்டிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றது என்று அவர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவையும் விமர்சியுங்கள்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் ஒரு நாளில் 15 – 16 விக்கெட்டுகள் விழும் போது அனைவரும் பந்து முதல் நாளிலேயே இவ்வளவு சுழலக்கூடாது என்று சொல்வார்கள். அப்படியானால் இங்கே மட்டும் பந்து ஏன் இவ்வளவு வேகமாக இருக்கிறது? இது ஆஷஸ் தொடருக்கு நல்லதல்ல. ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட் தாக்குப் பிடிக்க வேண்டுமெனில் ஆஷஸ் போட்டிகள் 4 – 5 நாட்கள் நடைபெற வேண்டும்”
இதையும் படிங்க: யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது ரொம்ப தப்பு – திலீப் வெங்சர்க்கார்
“அதை விட்டுவிட்டு பெர்த், காபா போன்ற போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற உதவாது. ஒரே நாளில் 18 – 19 விக்கெட்டுகள் விழுந்த போட்டிகளின் சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா டாப் 5க்குள் இருக்கும். ஆஷஸ் தாக்குப் பிடிக்க வேண்டுமெனில் 2 நாட்களில் முடியும் டெஸ்ட் போட்டிகள் இருக்கக்கூடாது என்று நான் சொல்ல முயற்சிக்கிறேன். அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. பந்து சுழன்றால் புகார் செய்யாதீர்கள் என்று ஒரு ஸ்பின்னராக சொல்வேன். அதே போல இங்கு பந்து அதிக வேகமாக செல்கிறது” என்று கூறினார்.



