2 மாஸ் கேட்ச்களை பிடித்த ரோஹித் சர்மா, சிராஜ்.. கான்பூரில் மோனிமுல் ஹைக் 20 வருட அபார சாதனை

Catches
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் மழையால் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்ட முதல் நாள் முடிவில் 103-7 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் அதன் பின் நடைபெற்ற 2 நாட்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த சூழலில் செப்டம்பர் 30ஆம் தேதி நான்காவது நாள் ஆட்டம் மீண்டும் துவங்கியது. அதில் களத்தில் இருந்த ரஹீமை 11 ரன்களில் பும்ரா அபாரமான பந்தால் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

2 மாஸ் கேட்ச்கள்:

அடுத்ததாக வந்த லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்திருந்த போது அதிரடியான பவுண்டரியை பறக்க விட்டார். ஆனால் அதை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாகத் தாவி ஒற்றை கையில் பிடித்து அவுட்டாக்கியது ரசிகர்களையும் விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. அதே போல அதற்கடுத்ததாக வந்த சாகிப் அல் ஹசன் 9 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தை அதிரடியாக அடிக்க முயற்சித்தார்.

ஆனால் சரியாக அடிக்கத் தவறியதால் கேட்ச்சாக மாறிய அந்தப் பந்தை மிட் ஆஃப் திசையில் பின்னோக்கிய ஓடிய சிராஜ் அப்படியே தாவி விழுந்து அற்புதமாக பிடித்து அவுட்டாக்கினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மோனிமுல் ஹைக் அரை சதம் அடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல நேர்த்தியாக விளையாடிய அவர் சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

மோனிமுல் ஹைக் சதம்:

இதன் வாயிலாக கான்பூர் மைதானத்தில் கடந்த 40 வருடங்களில் சதமடித்த 2வது வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையும் மோனிமுல் ஹைக் படைத்துள்ளார். கடைசியாக 20 வருடங்களுக்கு முன் 2004ஆம் ஆண்டு ஆண்ட்ரூ ஹால் இந்தியாவுக்கு எதிராக கான்பூரில் 163 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய நல்ல ஆட்டத்தால் நான்காவது நாள் உணவு இடைவேளையில் வங்கதேசம் 205-6 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த டிம் சவுதி – விவரம் இதோ

இருப்பினும் இன்னும் ஒன்றரை நாட்கள் மட்டுமே இந்த போட்டியில் மீதமுள்ளது. அதனால் வங்கதேசத்தை விரைவில் ஆல் அவுட் செய்தாலும் 2வது இன்னிங்ஸ் விளையாடுவதற்கு போதுமான நேரம் இல்லை. எனவே இந்தப் போட்டி டிராவில் முடிவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement