சி.எஸ்.கே அணியில் உச்சத்தில் இருந்த வீரர் இன்னைக்கு குஜராத் அணிக்கு நெட் பவுலரா? – சோகமான வாழ்க்கை

Mohit
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கும் மேல் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைக்க காத்திருக்கிறது. இந்த வருடம் உருவாக்கப்பட்டுள்ள புதிய இரண்டு அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட ப்ரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் இந்த வருட ஐபிஎல் இந்தியாவில் நடைபெற்றாலும் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலைப்பயிற்சியில் வீரர்கள்:
இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி, பெங்களூர், பஞ்சாப் போன்ற அணிகள் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக மிகவும் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

அதிலும் நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக இதர அணிகளை காட்டிலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் அயர்லாந்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டிலை இந்த ஐபிஎல் தொடருக்காக பிரத்தியேக நெட் பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்துள்ள அந்த அணி தனது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

நெட் பவுலராக மோஹித் சர்மா:
சென்னை அணியை போலவே இதர அணிகளும் வலை பயிற்சிக்காக ஒரு சில ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்களை வரவழைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அந்த அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது. அதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியமும் அதிர்ச்சியும் காத்திருந்தது என்றே கூற வேண்டும். ஆம் குஜராத் டைட்டன்ஸ் அணியினருடன் இந்திய வீரர் மோகித் சர்மா காணப்பட்டார். ஆனால் குஜராத் அணிக்காக விளையாடும் ஒரு வீரராக அல்ல. அந்த அணிக்கு வலை பயிற்சியில் பந்து வீசும் ஒரு பந்து வீச்சாளராக – இதைப் பார்த்த பல ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

ஊதா தொப்பி நாயகன்:
ஏனெனில் கடந்த 2010-ஆம் ஆண்டு வாக்கில் திறமை வாய்ந்த பந்துவீச்சாளராக வலம் வந்த அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டார். அந்த சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்ற அவர் 23 விக்கெட்டுகளை எடுத்து சென்னை அணியின் பல வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்த அவர் அதற்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பியையும் வென்று அசத்தினார்.

அதன் காரணமாக கடந்த 2014 டி20 உலக கோப்பை மற்றும் 2015 உலக கோப்பை ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடினார். அத்துடன் டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகளுக்காகவும் விளையாடி வந்த அவர் நிலையில் அவரின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியில் இருந்து மட்டுமல்லாது ஐபிஎல் தொடரில் இருந்தும் காணாமல் போனார்.

அப்படிப்பட்ட நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லக்மன் மேரிவாலா, பரிந்த்ர் ஸ்ரண் ஆகியோருடன் ஒரு நெட் பந்துவீச்சாளராக நீண்ட நாட்களுக்கு பின் மோகித் சர்மாவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதா என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் 86 ஐபிஎல் போட்டிகளில் 92 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இந்தியாவிற்காக 34 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement