IPL 2023 : கடைசி பந்தில் வெற்றியை விட்டதால் நைட் ஃபுல்லா தூங்கல, போராடி வீழ்ந்த குஜராத் வீரர் – சோகத்துடன் பேட்டி

CSK vs GT 2
- Advertisement -

அனல் பறந்து வந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பை வென்று வெற்றிகரமான மும்பையின் சாதனையை சமன் செய்தது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுத்து அதிரடியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும் மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

CSK vs GT Final

- Advertisement -

அதனால் வெற்றியை நெருங்கிய சென்னைக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது தன்னுடைய அனுபவத்தைக் காட்டிய மோகித் சர்மா துல்லியமான யார்கர் பந்துகளை வீசியதால் முதல் 4 பந்துகளில் துபே, ஜடேஜா இருவரும் சேர்ந்து 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன் காரணமாக குஜராத் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 5வது பந்தில் சில இன்ச் யார்கர் லென்த்தை அவர் தவற விட்டதை பயன்படுத்தி நேராக சிக்சர் அடித்த ஜடேஜா கடைசி பந்திலும் ஃபைன் லெக் திசையில் பவுண்டரியை பறக்க விட்டு வெற்றியை பறித்தார்.

தூங்கவே இல்ல:
அதனால் தோனி தலைமையிலான சென்னை 5வது கோப்பையை வென்றது அந்த அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் வாழ்த்தியுள்ளது. ஆனால் மறுபுறம் மாபெரும் ஃபைனலில் ஷமி, ரசித் கான் போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறிய நிலையில் தோனியை கோல்டன் டக் அவுட்டாக்கி 3 விக்கெட்டுகளை எடுத்த மோகித் சர்மாவின் போராட்டம் வீணானது. குறிப்பாக கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசிய அவர் கடைசி பந்தில் வெற்றியை தவற விட்டு ஏமாற்றத்தை சந்தித்தார்.

Mohit Sharma

இந்நிலையில் கடைசி பந்தில் தோல்வியை சந்தித்ததால் அன்றைய நாள் முழுவதும் தூங்காமல் தவித்ததாக குஜராத்தின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடிய மோகித் சர்மா தெரிவித்துள்ளார். 2014 தொடரில் சென்னைக்காக தோனி தலைமையில் ஊதா தொப்பியை வென்று 2015 உலக கோப்பையில் இந்திய அணியில் முக்கிய வீரராக செயல்பட்ட அவர் நாளடைவில் ரன்களை வாரி வழங்கியதால் கழற்றி விடப்பட்டார். அந்த நிலையில் கடந்த வருடம் குஜராத்தின் நெட் பவுலராக செயல்பட்டு அசத்தியதால் இந்த சீசனில் ரிங்கு சிங்கிற்கு எதிராக 5 சிக்சர்களை வாரி வழங்கிய யாஷ் தயாளுக்கு பதிலாக பாதியில் வாய்ப்பு பெற்ற அவர் 27 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்களை எடுத்த 2வது பவுலராக சாதனை படைத்தார்.

- Advertisement -

அப்படி கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் அனுபவத்தால் ஃபைனலில் கடைசி பந்து வரை குஜராத்தின் வெற்றிக்காக போராடிய அவர் தோல்வியால் சந்தித்த ஏமாற்றுத்துடன் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் எனது மனம் தெளிவாக இருந்தது. வலைப்பயிற்சி மற்றும் இதற்கு முந்தைய சமயங்களில் அது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளேன். எனவே அனைத்து பந்துகளையும் யார்க்கராக வீசலாம் என்று கடைசி ஓவரில் முடிவெடுத்தேன். அதில் வெற்றிகரமாக செயல்பட்ட போது 5வது பந்துக்கு முன்பாக எனது அருகே வந்த குஜராத் அணியினர் எனது திட்டத்தை கேட்டறிந்தனர்”

Mohit Sharma

“அப்போது மீண்டும் யார்க்கர் பந்தை தான் வீசப் போகிறேன் என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து இறுதிப்பந்தில் நான் யார்க்கர் வீச முயற்சித்தேன். குறிப்பாக எனக்கு நானே ஆதரவு கொடுத்துக் கொண்டு கவனத்துடன் இந்த ஐபிஎல் தொடரில் முழுவதும் செயல்பட்டது போல் செயல்பட நினைத்தேன். ஆனால் அந்த பந்து தரையில் படக்கூடாத இடத்தில் பட்டது. அப்போது ஜடேஜா பேட்டை விட்டு அடித்து விட்டார்”

இதையும் படிங்க:வீடியோ : ஜடேஜா காலில் விழுந்து ஆசிர்வாதம், பாலிவுட் படத்தை மிஞ்சிய இந்திய கலாச்சார காதல் ஜோடி – ரசிகர்கள் வியப்பு

“என்னால் முடிந்தளவுக்கு முயற்சித்தும் தோற்றதால் தூங்க முடியவில்லை. குறிப்பாக அதற்கு பதிலாக வேறு பந்தை வீசியிருக்கலாமா என்பது போன்ற எண்ணங்கள் வருவதால் தற்போது நான் நன்றாக இல்லை. இருப்பினும் இதிலிருந்து நகர்வதற்கு முயற்சிக்கிறேன்” என்று கூறினார். அப்படி முழுமூச்சுடன் போராடிய மோஹித் சர்மாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement