இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. அதற்கு அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
லார்ட்ஸ் தோல்வி குறித்து எமோஷனலான மெசேஜை பகிர்ந்த : முகமது சிராஜ்
கடந்த ஜூலை 10-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியானது கடைசி நாள் வரை விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்தது. இறுதியில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் போது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது கடைசி நேரத்தில் எவ்வளவோ போராடியும் தோல்வியை சந்தித்தது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 61 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மற்றொருபுறம் பவுலர்களை வைத்துக்கொண்டு ஜடேஜா மிகச்சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த போட்டியின் போது கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 30 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள் அடித்திருந்த வேளையில் ஆட்டமிழந்தார். அதிலும் குறிப்பாக சோயிப் பஷீர் வீசிய பந்தை துல்லியமாக தடுத்தும் பந்து உருண்டு சென்று ஸ்டம்பை தட்டியதால் அவரது விக்கெட் விழுந்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சிராஜ் தன்னால் தான் இந்திய அணி தோற்று விட்டது என்பதை நினைத்து துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதன்பின்னர் இங்கிலாந்து வீரர்கள் அவரை சமாதானம் செய்து பெவிலியன் நோக்கி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் தற்போது இந்த போட்டி குறித்தான ஒரு எமோஷனலான மெசேஜை முகமது சிராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : “சில போட்டிகள் மட்டுமே எப்போதும் உங்களுடன் இருக்கும்”.
இதையும் படிங்க : ஜடேஜாவை மட்டும் இந்த விடயத்தில் குறை சொல்வது தவறு.. மத்தவங்களையும் பாருங்க – முகமது அசாருதீன் கருத்து
அது அந்த போட்டியில் கிடைத்த முடிவுகளால் அல்ல. உங்களுக்கு கற்றுத் தந்த பாடத்தினால் என்று லார்ட்ஸ் தோல்வியை நினைத்து சிராஜ் தனது உருக்கமான கருத்தினை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் உங்களால் முடிந்தவரை நீங்கள் போராடிவிட்டீர்கள். கடைசியில் நீங்கள் ஆட்டம் இழந்தது உங்களது தவறு கிடையாது. எனவே நீங்கள் இந்த தோல்விக்காக வருத்தப்பட வேண்டாம் என முகமது சிராஜூக்கு ஆறுதல் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.



