அப்பா இறந்த போது ரூமில் அழுதேன், 5 விக்கெட் எடுப்பேன்னு கோச் சொன்ன மாதிரியே நடந்துச்சு – சிராஜ் நெகிழ்ச்சி பேட்டி

Siraj
- Advertisement -

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடி கடந்து 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் முதல் போட்டியிலேயே சுமாராக செயல்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் ரன்களை வாரி வழங்கி நிறைய வெற்றிகளை எதிரணிக்கு தாரை வார்த்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து தனது மகனை இந்தளவுக்கு உயர்த்திய உங்களது தந்தையைப் போல் ஆட்டோ ஓட்ட செல்லுங்கள் என்று ஒரு கட்டத்தில் ஏராளமான கிண்டல்கள் எழுந்தன. ஆனால் மனம் தளராமல் போராடிய அவருக்கு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் அப்போதைய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.

Siraj 1

- Advertisement -

அதை பயன்படுத்தி 2021 சீசனில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் அந்த வருடம் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாட தேர்வானார். அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு உருவானது. ஆனால் அப்போது இந்தியாவில் இருக்கும் முகமது சிராஜ் தந்தை திடீரென்று இயற்கை எய்தினார். உலகில் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கடினமாக உழைத்து அதன் பெருமையை பேசாமல் வளர்த்து வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக இருக்கும் அப்பாவை இழப்பது ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மிகப்பெரிய வேதனையாகும்.

சிராஜ் நெகிழ்ச்சி:
அப்படிப்பட்ட வாழ்வின் மிகப்பெரிய துயர செய்தியை கேட்ட முகமது சிராஜ் அந்த சமயத்தில் கடுமையான லாக் டவுன் விதிமுறைகளால் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணித்து தனது தந்தைக்கு கடைசி கடமைகளை ஆற்றும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அந்த தியாகத்தின் பயனாக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் அறிமுகமாகி தந்தையின் ஆசிர்வாதத்துடன் அசத்திய அவர் காபாவில் 5 விக்கெட்டுகளை எடுத்து 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா சரித்திர வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

Siraj-1

அப்போதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தி தற்போது தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். அப்படி தனது தந்தையின் ஆசிர்வாதத்துடன் அசத்தி வரும் முகமது சிராஜ் அவருடைய இறப்புக்கு செல்லாத போது ரூமில் தனிமையாக அழுததாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த சமயத்தில் உனது தந்தை ஆசீர்வாதத்துடன் நிச்சயம் 5 விக்கெட்டுகள் எடுப்பாய் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னது போல் காபாவில் நடந்தது நம்ப முடியாததாக இருந்ததாக தெரிவிக்கும் முகமது சிராஜ் இது பற்றி ஆர்சிபி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவில் இருந்த போது நாங்கள் மற்றவர் அறைக்கு செல்ல முடியாது. வீடியோ காலில் மட்டுமே பேசிக்கொள்ள முடியும். இருப்பினும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் அடிக்கடி போன் செய்து சாப்பிட்டாயா என்பது போல் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார். நான் மணந்து கொள்ள இருக்கும் பெண்ணும் அடிக்கடி பேசியது ஆறுதலாக இருந்தது. ஆனால் தனிமையில் இருக்கும் போது நான் நிறைய அழுதிருக்கிறேன். எனது தந்தையின் இறப்புக்கு அடுத்த நாள் பயிற்சிக்கு சென்ற போது எனது தந்தை ஆசிர்வாதத்துடன் 5 விக்கெட்டுகள் எடுப்பேன் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்”

siraj

“அவர் சொன்னது போலவே பிரிஸ்பேன் நகரில் 5 விக்கெட்கள் (5/73) எடுத்தேன். அப்போது ரவி சாஸ்திரி நான் சொன்னது போலவே நடந்ததை பார் என்று பாராட்டினார். எனது தந்தை இருக்கும் போது அவருக்கு முன்னே கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டது வேடிக்கையாக இருந்தது. என்னை கடினமாக உழைத்து வளர்த்த அவர் என்னுடைய வெற்றிகளை பார்த்து மிகவும் பெருமையடைந்தார். அவருக்கு முன் நான் சிறப்பாக செயல்பட விரும்பிய கனவு நிஜமானாலும் அதை இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அவரை மட்டும் கூட்டினு போவாதீங்க – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

அப்படி தந்தை இறப்புக்கு கூட செல்லாமல் தாய் நாட்டுக்காக விளையாடிய சிராஜ் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின் அவரது நினைவிடத்திற்கு சென்று மலர்கள் வைத்து வழிபடும் பாக்கியத்தை மட்டுமே பெற்றது குறிப்பிடப்பட்டது.

Advertisement