
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கும் 4வது போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடிக் கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகி வருகிறது.
முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினார்கள். அதனால் லோயர் ஆர்டரில் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் அடித்து போராடியதால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருடன் சேர்ந்து 54 பந்துகளை எதிர்கொண்ட பும்ரா 5 ரன்கள் அடித்து போராடியும் முக்கிய நேரத்தில் தேவையற்ற ஷாட்டை அடித்து விக்கெட்டை இழந்தார். அதே போல கடைசி விக்கெட்டுக்கு நங்கூரத்தைப் போட்ட சிராஜும் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து நன்றாகவே பேட்டிங் செய்தார். அப்போது சோயப் பஷீர் வீசிய பந்தை அவர் நடு பேட்டில் தடுத்தும் அதிர்ஷ்டமின்மையால் தரையில் பட்டு சுழன்று ஒற்றை பெய்ல்ஸை தள்ளி விட்டு இந்தியாவை தோற்கடித்தது.
இந்நிலையில் 3வது போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைக்காமல் தாம் அவுட்டாக மாட்டேன் என்று உணரும் அளவுக்கு தம்முடைய தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததாக சிராஜ் கூறியுள்ளார். அதனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் உதவி செய்திருந்தால் இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக தாம் அடித்த பந்து போல்டானது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த போது உண்மையில் நான் அவுட்டாக மாட்டேன் என்று உணர்ந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய தன்னம்பிக்கை அற்புதமாக இருந்தது. அதனால் ஒருவேளை நான் அவுட்டானால் அது என்னுடைய தவறால் நடந்ததாக மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொண்டு விளையாடினேன். அந்தப் போட்டியை நாங்கள் வென்றிருக்க முடியும்”
இதையும் படிங்க: பும்ராவின் அந்த ஓவரை பாத்துட்டு தான் இந்தியாவை திருப்பி அடிக்கனும்ன்னு பேசி அடிச்சோம்.. ஹாரி ப்ரூக்
“ஆனால் கடைசியில் போராடியும் தோற்றது குத்தியது. போட்டி முடிந்த பின் அனைவரும் நன்றாக போராடினீர்கள் என்று சொன்னார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது போல் இருந்தோம். அப்போது நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்றோம். அந்தப் போட்டியில் தோற்றாலும் சண்டை செய்தது எங்களுக்கு முக்கியமாக இருந்தது” என்று கூறினார்.