என்னோட எல்லா வளர்ச்சிக்கும் அவர் தான் காரணம் – வைரலாகும் முகமது சிராஜ் பேசிய பழைய வீடியோ

Mohammed Siraj
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அடுத்ததாக உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்த நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் அபாரமாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா புதிய மகுடம் சூடியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த 2 தொடர்களிலும் 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் இந்தியா உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு பந்து வீச்சு துறையில் முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு இந்த தொடர்களில் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய போதும் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது கிடைக்காதது கௌதம் கம்பீர், சஞ்சய் மஞ்சரேக்கர் போன்ற முன்னாள் வீரர்களை ஏமாற்றமடைய வைத்தது. ஆனால் உழைப்பு என்றும் வீணாகாது என்ற வகையில் இந்த அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட்டை மிஞ்சிய சிராஜ் உலகின் புதிய நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

எல்லா புகழும் அவருக்கே:
ஹைதெராபாத்தை சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட தேர்வானார். அதில் ஓரளவு அசத்தியதால் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விராட் கோலி தலைமையில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாராகவே செயல்பட்டார். அதே போல் ஐபிஎல் தொடரிலும் நிறைய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி வெற்றிகளை தாரை வார்த்த அவர் அசோக் திண்டாடாவின் அடுத்த வாரிசு, உங்கள் தந்தையைப் போல் ஆட்டோ ஓட்ட போங்க என்பது போன்ற ஏராளமான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தார்.

இருப்பினும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்த விராட் கோலி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கொடுத்து வந்தார். அதை பயன்படுத்தி முன்னேறிய சிராஜ் 2020/21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தனது தந்தை இறப்பிற்கு கூட செல்லாமல் இந்தியாவுக்காக விளையாடி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அப்போது முதல் அனலை தெறிக்க விட துவங்கிய அவர் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி நிலையான இடத்தைப் பிடித்து பின்னர் ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்டு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதனால் நம்பர் ஒன் பவுலராக உச்சத்தைத் தொட்ட அவரது வெற்றிக்கு மோசமான காலங்களிலும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த விராட் கோலி தான் முக்கிய காரணம் என்று நேற்று முதலே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அத்துடன் அதை முகமது சிராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நேரடியாக சொன்ன வீடியோவையும் ரசிகர்கள் தோண்டி எடுத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதில் முகமது சிராஜ் கலங்கிய கண்களுடன் தமது வெற்றிக்கு விராட் கோலி தான் முக்கிய காரணம் என்று தெரிவித்து பேசியது பின்வருமாறு.

“என்னுடைய மோசமான செயல்பாடுகளுக்கு பின்பும் விராட் கோலி மற்றும் பெங்களூரு அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவு கொடுத்து மீண்டும் தக்க வைத்தார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இப்போது நான் இந்த இடத்தில் இருப்பதற்கான அனைத்து பாராட்டுகளும் விராட் கோலியையே சேரும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என்னதான் நாம ஜெயிச்சிருந்தாலும், நம்ம டீம் தொடர்ந்து இந்த தப்பை பண்றாங்க – அஜித் அகார்கர் கருத்து

அப்படி விராட் கோலியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவரது பெயரை காப்பாற்றும் வகையில் அசத்தும் சிராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் கபில் தேவ், பும்ரா ஆகியோருக்கு பின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்று சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement