ஐபிஎல் 2025 பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. இந்த வருடம் இந்திய வீரர் முகமது சிராஜ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து வெளியேறி குஜராத் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறுவது உணர்வுபூர்வமாக கடினத்தைக் கொடுப்பதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அறிமுகமான சிராஜ் ஆரம்பக் காலங்களிலேயே ரன்களை வாரி வழங்கினார். அதனால் உங்கள் அப்பாவை போல ஆட்டோ ஓட்டச் சொல்லுங்கள் என்று நிறைய விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன. ஆனால் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி பெரிய ஆதரவைக் கொடுத்தார். அதைப் பயன்படுத்தி முன்னேற்றத்தை சந்தித்த சிராஜ் 2018, 2019 சீசன்களில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.
விராட் பாய் ஆதரவு:
அதன் காரணமாக இந்திய அணியிலும் வாய்ப்பைப் பெற்ற அவர் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை பவுலராகும் அளவுக்கு முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளார். அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்த விராட் கோலியை பெங்களூரு அணியில் விட்டு விலகுவது கடினமாக இருப்பதாக சிராஜ் கூறியுள்ளார். இது பற்றி அவர் உருக்கத்துடன் பேசியது பின்வருமாறு.
“இந்த புதிய சீசனில் குஜராத் அணியுடன் இணைவது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. அதே சமயம் ஆம் ஆர்சிபி அணியை விட்டு விலகுவது உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. ஏனெனில் கடினமான நேரங்களில் விராட் பாய் எனக்கு மிகப்பெரிய ஆதரவுகளை கொடுத்துள்ளார். ஆனால் இங்கேயும் கில் தலைமையில் நாங்கள் நல்ல அணியைக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
சிராஜ் வரவேற்பு:
மேலும் சலிவாவை மீண்டும் ஐபிஎல் தொடரில் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பவுலர்களுக்கு உதவி செய்யும் என்று சிராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது பவுலர்களுக்கு நல்ல செய்தி. ஏனெனில் எந்த உதவியும் கிடைக்காத போது நாங்கள் பந்தில் சலிவாவை பயன்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கான வாய்ப்பைக் கண்டறிய முடியும்”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு 58 கோடி பரிசுத்தொகை.. ரோஹித், கம்பீர், அகர்கருக்கு எவ்வளவு? தனித்தனியே அறிவித்த செயலாளர்
“பந்தை சாதாரண சட்டையில் தேய்ப்பது ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு உதவாது. ஆனால் உமிழ்நீரை பயன்படுத்துவது பந்தை ஒருபுறம் பளபளப்பாக்க உதவும். அது முக்கியமானது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து குஜராத் அணி இந்த வருடம் தங்களது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத் நகரில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



