அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக நாடு திரும்பியுள்ள இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
தெ.ஆ தொடருக்கு முன் முகமது சிராஜுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு :
அதன்படி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நவம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தற்போது கொல்கத்தா சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த தொடரானது துவங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் காயமடைந்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடித்திருந்த முகமது சிராஜ் அங்கிருந்து நாடு திரும்பிய பின்னர் இந்திய ஏ அணியுடன் இணைந்து தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார்.
அந்தவகையில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பங்கேற்று விளையாடியிருந்த சிராஜ் பீல்டிங் செய்கையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் மீண்டும் வந்து பந்துவீசவில்லை. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குள் அவர் காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறிய விஜய் ஷங்கர் திரிபுரா அணிக்காக செய்த சம்பவம் – விவரம் இதோ
ஒருவேளை முகமது சிராஜ் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் ஆகாஷ் தீப் அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி போட்டி துவங்க 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் முகமது சிராஜுக்கு ஏற்பட்டுள்ள காயம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



