இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 587 ரன்கள் குவித்து அசத்திய வேளையில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு சுருண்டது. அதன்காரணமாக 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
பும்ராவின் சாதனையை சமன் செய்த முகமது சிராஜ் :
இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் குவித்திருந்த இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது விக்கெட்டை இழந்து ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிய வேளையில் அதன்பின்னர் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரது பாட்னர்ஷிப் காரணமாக பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்டது.
குறிப்பாக 6-ஆவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு தங்களது முதல் இன்னிங்க்ஸை முடித்து கொண்டது. இந்திய அணி சார்பாக இந்த முதல் இன்னிங்சில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவர் எடுத்த இந்த 6 விக்கெட்டுகளின் மூலம் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவின் மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்து இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் முகமது சிராஜ் படைத்த சாதனை யாதெனில் :
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளராக இதுவரை ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே இருந்து வந்தார்.
இதையும் படிங்க : பும்ரா இல்லாததால எனக்கு அந்த பொறுப்பு இருக்கு.. 6 விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசிய – முகமது சிராஜ்
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜும் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் பும்ராவிற்கு அடுத்து குறிப்பிட்ட அந்த நான்கு நாடுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.