கபில் தேவ், பும்ரா ஆகியோரை மிஞ்சிய முகமது சிராஜ் – தோனி போல ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை

Mohammed Siraj vs WI
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றியது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஐசிசி தர வரிசையில் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ள இந்தியா 2011க்குப்பின் மீண்டும் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை இம்முறை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Siraj 1

- Advertisement -

இருப்பினும் அந்த வெற்றிக்கு தயாராகும் இந்த பயணத்தில் வேகப்பந்து வீச்சு துறையில் முதன்மை பவுலராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்காதது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருந்து வருகிறது. ஆனால் கவலை வேண்டாம் அவரது இடத்தில் நான் இருக்கிறேன் என்ற வகையில் அசத்தி வரும் முகமது சிராஜ் சமீபத்திய தொடர்களில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

புதிய வரலாற்று சாதனை:
கடந்த 2017ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணியில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் நிறைய ரன்களை வாரி வழங்கி விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து தடுமாறினார். இருப்பினும் தொடர்ந்து போராடிய அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் நகரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஓவரில் 76 ரன்கள் கொடுத்து சுமாராக செயல்பட்டார். அதனால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் தொடர்ச்சியான ஆதரவால் 2021 சீசனில் 11 விக்கெட்களை 6.78 என்ற மிகச் சிறப்பான எக்கனாமியில் எடுத்தார்.

IND vs SL Siraj Rohit

அதன் காரணமாக கடந்த 2022 பிப்ரவரி மாதம் தன்னுடைய 2வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் அதிலிருந்து நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மிரட்டலாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளை எடுத்து 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்ற அவர் சமீபத்திய இலங்கை தொடரில் 9 விக்கெட்டுகளை சாய்த்து 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

அதே வேகத்தில் நடைபெற்று முடிந்த நியூஸிலாந்து தொடரிலும் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இதுவரை வெறும் 21 ஒருநாள் போட்டிகளில் 38 விக்கெட்டுகளை 4.61 என்ற சிறப்பான எக்கனாமியில் 20.73 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் அதிவேகமாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த இந்திய பந்து வீச்சாளராக கபில் தேவ், பும்ரா போன்ற இதர வீரர்களை மிஞ்சியுள்ள சிராஜ் புதிய வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

Siraj

அந்த பட்டியல்:
1. முகமது சிராஜ் : 21 போட்டிகள்*
2. ஜஸ்பிரித் பும்ரா : 37 போட்டிகள்
3. மணிந்தர் சிங் : 41 போட்டிகள்
4. ரவீந்திர ஜடேஜா : 79 போட்டிகள்
5. அனில் கும்ப்ளே : 102 போட்டிகள்
6. கபில் தேவ் : 135 போட்டிகள்

- Advertisement -

முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் ஜாம்பவான் எம்எஸ் தோனி அதிவேகமாக (42 இன்னிங்ஸ்) நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி உலக சாதனை படைத்ததை ரசிகர்கள் மறக்க முடியாது. தற்போது அதே போல பந்து வீச்சு துறையில் குறைந்தபட்சம் இந்திய அளவில் சிராஜ் சாதனை படைத்துள்ளது அவருடைய திறமைக்கு சான்றாகும்.

இதையும் படிங்க: 24 வயசுலேயே இப்படி ஒரு இமாலய சாதனையா? கிரிக்கெட் உலகை மிரளவைத்த ரஷீத் கான் – விவரம் இதோ

அத்துடன் கடந்த வருடம் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்த சிராஜ் 2022 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். அதனால் 2022ஆம் ஆண்டின் கனவு ஐசிசி ஒருநாள் அணியிலும் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவர் 2023 உலக கோப்பையில் முதன்மை பவுலராக விளையாடுவதற்கு தகுதியானவராக அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement