- Advertisement -
இந்திய கிரிக்கெட்

7 விக்கெட்ஸ் 11 மெய்டன்.. ஃபிட்னெஸ் போதுமா? பெங்காலை வெற்றி பெற வைத்த ஷமி.. அகர்கருக்கு பதிலடி

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் அக்டோபர் 15ஆம் தேதி பல்வேறு நகரங்களில் துவங்கியது. அதில் எலைட் குரூப் இடம் வகிக்கும் பெங்கால் மற்றும் உத்தரகாண்ட் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய உத்தரகாண்ட் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பூபென் லால்வாணி 71 ரன்கள் எடுத்த நிலையில் பெங்கால் அணிக்கு சூரஜ் ஜெய்ஸ்வால் 4, இஷான் போரேல் 3, முகமது ஷமி 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். குறிப்பாக இந்திய அணியின் மூத்த வீரர் முகமது ஷமி ஒரே ஓவரில் ஜன்மேஜெய் ஜோசி 5, ரஞ்சன் குமார் 0, தேவந்திர சிங் 0 ஆகியோரை ஒற்றை இலக்கத்தில் காலி செய்தார்.

- Advertisement -

ஷமி அசத்தல்:

அடுத்ததாக விளையாடிய பெங்கால் அணி 323 ரன்கள் குவித்து முன்னிலைப் பெற்றது. அதிகபட்சமாக சுதீப் சாட்டர்ஜி 98, சுமந்தா குப்தா 82 ரன்கள் எடுத்த நிலையில் உத்தரகாண்டிற்கு அதிகபட்சமாக தேவேந்திர சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 110 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய உத்தரகாண்ட் 2வது இன்னிங்ஸில் போராடி 262 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் குணால் சண்டேலா 72, பிரசாந்த் சோப்ரா 82 ரன்கள் எடுத்தனர். பெங்காலுக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 155 இலக்கைத் துரத்திய பெங்கால் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 71* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அகர்கருக்கு பதிலடி:

இந்த வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அடுத்ததாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாட முடியவில்லை. இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அவர் இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினர்.

இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை: 18/5 டூ 239.. வெற்றிக்கு நிகராக தனது அணியை தூக்கிய ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி

இருப்பினும் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களிலும் நாளைத் துவங்கும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் ஷமி ஃபிட்டாக இல்லையென்று சொல்லி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட்டார். அதற்கு ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் தம்மால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாதா? என்று ஷமி தெரிவித்தார். அதோடு நிற்காத அவர் இப்போட்டியில் 39.3 ஓவர்கள் வீசி 11 மெய்டன் உட்பட 7 விக்கெட்டுகள் எடுத்து அகர்கருக்கு தன்னுடைய ஃபிட்னெஸை பதிலடியாக நிரூபித்து காண்பித்துள்ளார்.

- Advertisement -