இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் அந்த அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கம்பேக் கொடுத்திருந்தார்.
மீண்டும் விளையாட வந்தது மகிழ்ச்சி – முகமது ஷமி :
கடந்து 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த முகமது ஷமி காயத்துடன் இந்திய அணிக்காக தனது முழு பங்களிப்பையும் வழங்கி இருந்தார்.
அதன் பின்னர் காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட ஷமி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளார். இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று பேசப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் முகமது ஷமி தனது கம்பேக் குறித்து எமோஷனலாக சில விடயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது நமக்கு பெற்றோர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுத் தருவார்கள். அப்போது நாம் கீழே விழுவோம், மீண்டும் எழுவோம்.
ஆனால் நடக்க கற்றுக்கொள்வதை நிறுத்த மாட்டோம். அதே போல் தான் விளையாட்டிலும் காயமடைந்தாலும் மீண்டும் வந்து நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற முயற்சி என்னிடம் இருந்து வந்தது. நாம் ரன்களை குவிக்கும் போதும், விக்கெட்டுகளை எடுக்கும் போதும் அனைவரும் நம்முடன் இருப்பார்கள்.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் இவ்ளோ சப்போர்ட் பண்ண இதுதான் காரணம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
ஆனால் காயமடைந்து அணியில் இல்லாமல் போகும் சில கடினமான காலங்களில் தான் நம்முடன் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும். காயம் அடைந்து வெளியில் இருப்பது தான் ஒரு சோதனையான காலம். அந்த வகையில் கடந்த ஓராண்டாக காத்திருந்து மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.



