நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் அடுத்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை இந்திய அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன.
ஏனெனில் அந்த இருவருமே முதல் டெஸ்ட் போட்டியில் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தனர். குறிப்பாக பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடினார். ஆனால் அவருக்கு சமமாக பந்து வீசாத முகமது சிராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்தியா போராடாமலேயே தோல்வியை சந்தித்தது.
ஷமி ஆதரவு:
மேலும் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பெரிய விக்கெட்டுகள் எடுக்கவில்லை. மறுபுறம் கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி அசத்திய ஆகாஷ் தீப் சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரிலும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். அதனால் சிராஜை நீக்கி விட்டு அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் முகமது சிராஜை குறைத்து மதிப்பிட்டு நீக்க வேண்டிய அவசியமில்லை என்று அவருடைய பவுலிங் பார்ட்னர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். மேலும் முகமது சிராஜ் அசத்துவதற்கு தேவையான சில ஆலோசனைகளையும் ஷமி வழங்கியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜ் புதியவர் என்ற அர்த்தம் கிடையாது. அவர் நல்ல அனுபவத்தை கொண்டவர். சில நேரங்களில் நாம் கவனம் செலுத்தும் விஷயங்கள் நடப்பதில்லை”
ஷமி அட்வைஸ்:
“சிறப்பாக செயல்பட அவர் விரும்புகிறார் ஆனாலும் அது நடைபெறவில்லை என்ற சூழ்நிலையில் சிராஜ் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் விக்கெட்டுகளை எடுக்க விரும்புகிறார். ஆனால் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகவில்லை அல்லது அவரது பந்து வீச்சில் கொடுக்கப்படும் எட்ஜ்களை கேட்ச்சாக பிடிக்கப்படாமல் இருக்கலாம். சில நேரங்களில் இது போன்ற சுமாரான நாட்கள் வரும்”
இதையும் படிங்க: 108/6 டூ 308.. வங்கதேசத்தை பந்தாடிய தென்னாபிரிக்க வீரர்.. மார்க் பவுச்சர் கூட செய்யாத வரலாற்று சாதனை
“எனவே இது போன்ற சூழ்நிலையில் விரக்தியடைய எதுவும் இல்லை. அடிப்படையில் கவனம் செலுத்துங்கள். குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே தொடர்ந்து பந்து வீசுங்கள். அதை செய்தால் உங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



