நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாகவும் வீரராகவும் போற்றப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பை வென்ற அவருடைய தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. அதைத் தொடர்ந்து 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து கேப்டனாக வென்று காட்டிய தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியா வென்றது.
அதனால் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். மேலும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் செயல்பட்ட அவர் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடும் அவர் 2023 சீசனில் 5வது முறையாக கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார்.
ஓய்வுக்கான நேரம்:
ஆனால் இப்போது 42 வயதை தொட்டுள்ள அவர் 2025 சீசனில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்று விட்டதாக தோனி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட முகமது ஷமியிடம் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி எப்போது ஓய்வு பெறுவார்? என்று செய்தியாளர் கேட்டார்.
அதற்கு எப்போது நாம் விளையாடும் விளையாட்டு அலுப்பு தட்டுவதாக தோன்றுகிறதோ அப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தோனி தம்மிடம் சொன்ன பதிலை ஷமி கூறியுள்ளார். தோனியின் அந்த பதில் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கும் ஷமி இது பற்றி பேசியது பின்வருமாறு. “தோனியின் வருங்காலம் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து கேள்விக்குறி வைக்கின்றன. ஆனால் அவரோ பார்த்துக் கொள்ளலாம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்”
“ஒருமுறை மஹி பாயிடம் பேசிய போது நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள்? என்று நானும் கேட்டேன். அதற்கு தோனி 2 பதில்கள் சொன்னார். முதலில் எப்போது நீங்கள் விளையாடும் விளையாட்டு அலுப்புத் தட்டுவதாக தோன்றுகிறதோ அப்போது ஓய்வு பெற வேண்டும். 2வதாக எப்போது நீங்கள் அணியிலிருந்து கழற்றி விடப்பட போகிறோம் என்று உணர்கிறீர்களோ அப்போது விடை பெற வேண்டும் என்று சொன்னார்”
இதையும் படிங்க: விராட் கோலி, தோனியுடன் என்னை எப்போவும் கம்பேர் பண்ண மாட்டேன்.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா
“அவர் சொன்னது போல எப்போது நீங்கள் மகிழ்ச்சியாக விளையாடுவதை நிறுத்துகிறீர்களோ அப்போது ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்ததாக அர்த்தம். அப்போது நீங்கள் ஓய்வு பெற்று விட வேண்டும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட கிரிக்கெட்டில் விளையாட உங்களுடைய உடல் ஒத்துழைக்காது. அப்போது ஒரு வீரர் ஓய்வு பெற வேண்டும்” என்று கூறினார்.



