இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 108 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அது மட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 120 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
முக்கிய முடிவை கையிலெடுத்த முகமது ஷமி :
இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் காயங்களால் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடி இருந்தார். அந்த தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரராக வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் அணிக்காக சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் கழட்டிவிடப்பட்டார்.
இதுகுறித்து அப்போது பேசியிருந்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறுகையில் : மருத்துவ குழுவினரின் அறிக்கையின் படியே முகமது ஷமி இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஏனெனில் அவர் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இல்லை அதனால் தான் அவரை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும், அவரை நாங்கள் தேர்வு செய்ய விரும்பினாலும் தற்போதைக்கு அந்த சூழல் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இப்படி இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை இழந்த அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்போடு தற்போது முக்கிய முடிவு ஒன்றினை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாட இருக்கும் அவர் அந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ரிஷப் பண்டும் ஆடுவாரு.. துருவ் ஜுரேலும் ஆடுவாரு.. வெளியேறப்போவது யார்? – நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
அப்படி அவர் பெங்கால் அணியில் இடம் பிடித்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு அடுத்து நடக்கும் தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று நம்பலாம்.



