IND vs BAN : வங்கதேச தொடரில் இருந்து விலகிய முகமது ஷமி. ஏன் தெரியுமா? – மாற்றுவீரரை அறிவித்த பி.சி.சி.ஐ

Mohammad-Shami
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக அங்கிருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது டி20 தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை தவான் தலைமையிலான இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இழக்க நேரிட்டது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் முடிந்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட வேளையில் தற்போது மீண்டும் அவர்கள் இந்த தொடருக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டிசம்பர் நான்காம் தேதி காலை 11:30 மணிக்கு டாக்கா நகரில் துவங்குகிறது.

இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தற்போது அணியிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவலை பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்காக தயாராகி வந்த முகமது ஷமி தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும் அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சச்சினுக்கு தோனிக்கும் கூட அந்த பிரச்சனை இருந்திருக்கு. நீங்க கவலைப்படாதீங்க – ரவி சாஸ்திரி அறிவுரை

அவருக்கு பதிலாக அண்மையில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக அணியில் இணைகிறார் என்றும் பி.சி.சி.ஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement