இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று தம்முடைய 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2013 முதல் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். அதில் 64 டெஸ்ட், 101 ஒருநாள், 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முறையே 229, 195, 24 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
முன்னதாக 2023 உலகக் கோப்பையில் முதல் 4 போட்டியில் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ஹர்திக் பாண்டியா காயமடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷமி அதிரடியாக பந்து வீசி எதிரணிகளை தெறிக்க விட்டார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 7 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
வாய்ப்புக்கு ஏக்கம்:
அத்துடன் 24 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் ஷமி படைத்தார். இந்நிலையில் 2023 போலவே 2015, 2019 உலகக் கோப்பைகளிலும் தாம் சிறப்பாக செயல்பட்டதாக ஷமி கூறியுள்ளார்.
இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முகமது ஷமி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவை நேருக்கு நேராக கலாய்த்தார். அந்த வகையில் வாய்ப்புக்காக ஏங்கி பழகி விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி 2024 சியட் விருதுகள் வழங்கும் விழாவில் பேசியது பின்வருமாறு.
டிராவிட், ரோஹித்துக்கு முன்னே:
“எனக்கு அது பழகி விட்டது என்று நினைக்கிறேன். 2015, 2019 தொடர்களிலும் நான் அதே துவக்கத்தைக் கொடுத்தேன். அது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்திய பின் “நன்றி கடவுளே இனிமேல் அவர்கள் என்னை நீக்க மாட்டார்கள்” என்று நினைத்தேன். வாய்ப்புக்காக நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அதில் அசத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்”
இதையும் படிங்க: 10000 ரன்ஸ் அடிக்கலன்னா அவமானப்படுங்கன்னு சொன்னேன்.. 2011இல் ஃபீல் செய்த விராட் கோலி பற்றி ஹர்பஜன்
“அப்படி நீங்கள் தயாராக இருந்தால் தான் உங்களை நீங்களே நிரூபிக்க முடியும். இல்லையேல் களத்தில் மற்ற வீரர்களுக்கு தண்ணீரை மட்டுமே எடுத்துச் சென்று கொடுக்க முடியும். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போது அதை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதைக் கேட்டு ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோர் சொல்வதறியாது சிரித்தனர்.