மறுபடியும் கிடைக்காது.. கடைசி மூச்சு வரை இந்தியாவுக்கு கொடுக்க விரும்புறேன்.. கம்பேக் பற்றி ஷமி உருக்கம்

Mohammed Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023 உலகக் கோப்பையில் மிரட்டலாக பவுலிங் செய்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் குணமடைவதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொண்டார்.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் தற்போது ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் பவுலிங் செய்த ஷமி முழுமையாக ஃபிட்டாக வந்துள்ளார். அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.

- Advertisement -

ஷமி கம்பேக்:

அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஷமி விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 34 வயதாகும் தமக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஓய்வு பெற்றால் மீண்டும் கிடைக்காது என்று ஷமி கூறியுள்ளார். எனவே வாய்ப்பு கிடைக்கும் வரை தனது கடைசி மூச்சு வரை நாட்டுக்காக விளையாட விரும்புவதாக அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

இது பற்றி கொல்கத்தா ஈடன் கார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற பசி எப்போதும் நிற்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். அந்த பசி உங்களிடம் இருக்கும் வரை எவ்வளவு முறை காயங்கள் சந்தித்தாலும் உங்களால் மீண்டும் போராடி வர முடியும்”

- Advertisement -

கடைசி மூச்சு வரை:

“எவ்வளவு போட்டிகள் விளையாடினாலும் அது எனக்கு குறைவானதாகவே தோன்றுகிறது. ஏனெனில் ஒருமுறை கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று விட்டால் எனக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது. எனவே என்னுடைய கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட நான் விரும்புகிறேன். நாட்டுக்காகவும் மாநிலத்துக்காகவும் விளையாடிய வீரர்கள் காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை”

இதையும் படிங்க: இந்தியாவின் 2வது பெஸ்ட் ஷமி வந்துட்டாரு.. பும்ராவுடன் சேர்ந்தா அந்த தொடரில் வெற்றி நிச்சயம்.. கங்குலி உறுதி

“அதனால் காயத்தை சந்திக்கும் போதெல்லாம் எப்போது மீண்டும் விளையாடுவோம் என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கும். உங்களிடம் கடினமான உழைப்பு மற்றும் கமிட்மென்ட் இருந்தால் எந்த காயமும் உங்களை நீண்ட காலம் அணியிலிருந்து வெளியே வைக்க முடியாது. நீங்கள் மீண்டும் வருவதற்கான வழியை எப்படியாவது கண்டறிவீர்கள்” என்று கூறினார். இதை அடுத்து ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஷமி இந்தியாவுக்காக களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement