இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ஷமி விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2023 உலகக்கோப்பையில் காயத்தை சந்தித்த அவர் ஒரு வருடம் கழித்து மீண்டும் விளையாட உள்ளார்.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் நீண்ட காலம் குணமடைய எடுத்துக்கொண்ட ஷமி கடந்த ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடிய காரணத்தால் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தொடரில் கடைசி வரை விளையாடாத அவர் தற்போது தான் விளையாட உள்ளார்.
ஷமி இஸ் பேக்:
மறுபுறம் அவர் இல்லாமல் ஆஸ்திரேலியாவில் தனி ஒருவனாக பும்ரா போராடிய 32 விக்கெட்டுகளை எடுத்தும் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது. இந்நிலையில் ஷமி தற்சமயத்தில் இந்தியாவிலேயே பும்ராவுக்கு பின் 2வது சிறந்த பவுலர் என்று சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார். மேலும் ஷமியும் பும்ராவும் சேர்ந்தால் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஷமி பேசியது பின்வருமாறு. “ஷமி ஃபிட்டாக வந்துள்ளதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பும்ராவுக்கு பின் அவர் நம்முடைய நாட்டில் மிகவும் சிறந்த பவுலர் என்று நினைக்கிறேன். நீண்ட காலம் கழித்து விளையாடுவதால் அவர் கொஞ்சம் பதற்றமாக இருப்பார். குறிப்பாக முழங்காலில் காயத்தை சந்தித்து வருவதால் படபடப்பு இருக்கலாம்”
ஷமி – பும்ரா ஜோடி:
“ஆனால் காயத்திலிருந்து வந்த பின் ஷமி பெங்கால் அணிக்காக நிறைய பவுலிங் செய்துள்ளார். அது மீண்டும் இந்திய அணியில் அசத்துவதற்கு உதவும். அவர் உலகின் எந்த பவுலர்களைப் போலவும் சிறந்த பவுலர். டெஸ்ட் போட்டியில் ஒரு பக்கம் பும்ரா மட்டும் பந்து வீசுவதற்கும் பும்ரா – ஷமி ஆகிய இருவரும் சேர்ந்து இருபுறங்களிலும் பந்து வீசுவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன”
இதையும் படிங்க: அந்த 3ம் ராக்கெட் மாதிரி இருக்கு.. டி20 தொடரில் பஸ்பால் இந்தியாவை நொறுக்கும்.. மெக்கல்லம் அதிரடி
“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து விளையாடுவது மிகவும் முக்கியம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர்கள் சேர்ந்து விளையாட உள்ளார்கள். அவர்கள் சேர்ந்து விளையாடினால் இந்தியா கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்றால் மிகையாகாது.



