
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சீனியர் வீரர் முகமது ஷமி கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். அத்தொடரில் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவர் ஒவ்வொரு போட்டியிலும் அனலாக பந்து வீசி எதிரணிகளை தெறிக்க விட்டார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் மட்டும் 7 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார்.
அதன் வாயிலாக ஒரு உலகக் கோப்பை செமி ஃபைனலில் 7 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக அவர் உலக சாதனை படைத்தார். முன்னதாக அந்த உலகக் கோப்பையில் சந்தித்திருந்த லேசான காயத்தை பொருட்படுத்தாமல் முகமது ஷமி நாட்டுக்காக விளையாடினார். ஆனால் அதன் பின் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த ஒரு வருடமாக எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.
ஷமியின் கம்பேக்:
அவர் விளையாடாதது 2023/24 டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் தற்போது குணமடைந்துள்ள ஷமி பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அதனால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்பாக 2024 துலீப் கோப்பை உள்ளூர் தொடரில் அவர் விளையாடுவார் என்று நம்பப்பட்டது.
ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட துலீப் கோப்பை அணிகளில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன் தம்முடைய பெங்கால் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளதாக ஷமி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் மிகவும் கடினமாக முயற்சிக்கிறேன்”
“ஆனால் இந்திய ஜெர்சியை அணிவதற்கு முன்பாக என்னை நீங்கள் பெங்கால் வண்ணத்தில் பார்க்கலாம். நான் பெங்கால் அணிக்காக 2 – 3 போட்டிகளில் விளையாட உள்ளேன். அதற்காக தற்போது நான் முழுமையாக தயாராகி வருகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2024 ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணி வரும் அக்டோபர் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே பீகார் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்க அணிக்காக 64 வருட சாதனையை கேசவ் மகாராஜ்.. ஆல் டைம் நாயகனாக வரலாற்று சாதனை
அந்தப் போட்டிகளில் ஷமி களமிறங்கி கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவார் என்று நம்பலாம். அப்படி இல்லை என்றாலும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் துவங்கும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷமி விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம்.