
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் 2 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற வலுவான முன்னிலையில் உள்ளது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மூன்றாவது போட்டியிலாவது விளையாடுவாரா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
ஏனெனில் கடந்து 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது கடைசியாக இந்திய அணியில் விளையாடியிருந்த முகமது ஷமி இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கவில்லை. இதன் காரணமாக அவர் எப்போது இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அந்த வகையில் தற்போது வெளியான தகவலின் படி : சென்னையில் நீண்ட நேரம் வலைப் பயிற்சி செய்தபோது முகமது ஷமி சிறிது அசவுகரியத்தை சந்தித்தார் என்பதனால் அவர் முழுஉடற்தகுதி பெறும் வரை விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக இந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியையும் தவறவிடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்றும் அப்படி இந்த தொடரில் அவரால் விளையாட முடியவில்லை என்றாலும் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்து விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரஷீத் கானையும் மிஞ்சி டி20 போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய வனிந்து ஹசரங்கா – விவரம் இதோ
இந்திய அணிக்காக அவர் விளையாடி 14 மாதங்களான வேளையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் முக்கிய வீரராக பங்கேற்க இருக்கும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.