இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் போது கணுக்கால் காயத்துடன் இந்தியாவுக்காக விளையாடி இருந்தார். அந்த போட்டி முடிந்த பிறகு தனது காயத்தின் தன்மையை வெளிப்படையாக அறிவித்த அவர் சிகிச்சை பெற்றுக் கொள்ளப்போவதாக கூறி இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் அவர் விளையாடவில்லை.
இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி :
பின்னர் காயத்திற்கான சிகிச்சையை மேற்கொள்ள லண்டன் சென்றிருந்த அவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கடந்த பல மாதங்களாகவே ஓய்வில் இருந்து வந்தார். அதனை தொடர்ந்து உடற்தகுதியில் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்ட ஷமி பந்துவீச்சு பயிற்சி துவங்கினார். தற்போது சொந்த ஊரிலிருந்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி வந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது படிப்படியாக தனது உடற்தகுதியை மீட்டெடுத்து வரும் முகமது ஷமி பி.சி.சி.ஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ள முகமது ஷமி நன்றாக முன்னேறி இருப்பதாகவும், அவர் அடுத்து வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 16-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.
அதன் பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இப்படி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்கள் இருப்பதனால் இந்திய அணிக்கு முகமது ஷமி அவசியம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரபல தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலின் படி :
இதையும் படிங்க : 6, 6, 6, 4, 6, 6.. ஒரே ஓவரில் 34 ரன்ஸ்.. கண்ணாடியை உடைத்த கப்டில்.. 9 போர்ஸ் 11 சிக்ஸ்.. 38 வயதில் மாஸ் ஆட்டம்
முகமது ஷமியின் உடற்பகுதி மிகவும் சரியான பாதையில் உள்ளது. அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார். பிசிசிஐ-யின் கண்காணிப்பில் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் என்றும் அதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் அவர் இடம் பிடிப்பார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.



