
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. மறுபுறம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அந்த அணி கடுமையான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே அந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் அதிரடியாக விமர்சித்தார். குறிப்பாக புதிய பவர்பிளே போல 13வது ஓவரிலும் அவரால் எப்படி பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிகிறது என்று இன்சமாம் கேள்வி எழுப்பினர். எனவே நடுவர்கள் அவரை நன்றாக கவனிக்க வேண்டும் என்று இன்சமாம் கேட்டுக்கொண்டார்.
ஷமி பதிலடி:
அதற்கு ரோகித் சர்மா சரியான விளக்கங்களுடன் தக்க பதிலடி கொடுத்தார். அப்போது ரிவர்ஸ் ஸ்விங்கை உலகிற்கே கற்றுக்கொடுத்த பாகிஸ்தானைச் சேர்ந்த எங்களுக்கு நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள் என ரோகித் சர்மாவுக்கு மீண்டும் இன்சமாம் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் பந்துக்குள் ஏதோ கருவியை வைத்து ஸ்விங் செய்ததாக தம்மையும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசான் ராஜா விமர்சித்ததாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய பவுலர்களை பற்றி குறை சொல்வதற்கு முன்பாக வரலாற்றில் பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தி ஆதாரத்துடன் சிக்கி தண்டனை பெற்றதை பற்றி இன்சமாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என ஷமி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2023 உலகக் கோப்பையில் நான் பந்தில் கருவி வைத்திருந்ததாக அவர்கள் என்னையும் விமர்சித்தனர்”
“அதே போல சமீபத்தில் அர்ஷ்தீப் பற்றி மற்றொரு முட்டாள்தனமான கருத்து வந்தது. இன்சமாம் அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவர் இப்படி ஒரு கருத்தை சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரிவர்ஸ் ஸ்விங்கை அவர்கள் தான் துவக்கினர். ஆனால் நாங்கள் அதை செய்யும் போது அவர்களுக்கு பிரச்சினையாக தெரிகிறது”
“இந்திய பவுலர்கள் பற்றி எதையும் சொல்வதற்கு முன்பாக அவர்கள் பந்தை சேதப்படுத்தி சிக்கிய தங்களுடைய கடந்த கால வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய மக்களை முட்டாளாக பார்க்கின்றனர். அவர்களுடைய அணி நன்றாக விளையாடாத போது இந்தியா பற்றி இப்படி விமர்சிக்கின்றனர். ஒருவேளை ரிவர்ஸ் ஸ்விங்கில் நாங்கள் ஏமாற்று வேலை செய்வதாகச் சொன்னால் அதை அறிமுகப்படுத்திய அவர்கள் தான் முதலில் ஏமாற்றியிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஐபிஎல் கிடையாது.. எனது கேரியரின் மறக்க முடியாத டாப் 3 வெற்றிகள் இது தான்.. ரோஹித் வெளியிட்ட லிஸ்ட்
“ஒருவேளை 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட நான் பாகிஸ்தானுக்கு சென்றால் 3 பந்துகளை எடுத்துச் செல்வேன். அங்கே 20 பேருக்கு முன்பாக பந்தை வெட்டி அதற்குள் எந்த கருவியையும் நான் வைக்கவில்லை என்று காட்டுவேன். அத்துடன் ரிவர்ஸ் ஸ்விங் எப்படி வருகிறது என்பதையும் அவர்களுக்கு செய்து காட்டுவேன்” என்று கூறினார்.