
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை தேர்வுக்குழு கழற்றி விட முயற்சித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் விளையாடிய அவர் நெருப்பாக பந்து வீசி இந்தியா ஃபைனல் செல்ல உதவினர். அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.
அத்தொடரில் ஷமி விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானது. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த அவர் கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்காற்றினார். அதனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட்டார்.
அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கழற்றி விடப்பட்ட ஷமி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலும் கழற்றி விடப்பட்டுள்ளார். அதனால் அதிருப்தியடைந்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா? என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். அது பற்றி நேற்றைய முன்தினம் என்டிடிவியில் கலந்து கொண்ட அகர்கரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ஒருவேளை முகமது ஷமி ஃபிட்டாக இருந்தால் இந்நேரம் ஆஸ்த்ரேலியாவுக்கு சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று அகர்கர் பதிலளித்தார். அத்துடன் வருங்காலங்களில் ஃபிட்டாக மாறினால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் அகர்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நான் எப்படி பந்து வீசுகிறேன் என்பது உங்களுடைய கண்களுக்கு முன் சாட்சியாக இருக்கிறது என்று ஷமி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரை (அகர்கர்) எது வேண்டுமானாலும் சொல்ல விடுங்கள். நான் எப்படி பந்து வீசினேன் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவை அனைத்தும் உங்களுடைய கண்முன்னே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அதாவது தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் பவுலிங் எப்படி இருக்கிறது என்பதை ரஞ்சிக்கோப்பையில் கண்களால் பார்த்த பின்பும் ஃபிட்டாக இல்லை என்று சொல்லலாமா? என அகர்கருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சச்சின், விராட், தோனி, டிராவிட் ஆகியோருக்கு அடுத்து 5 ஆவது வீரராக நாளை ரோஹித் சர்மா – நிகழ்த்தவிருக்கும் சாதனை
அத்துடன் ரஞ்சிக் கோப்பை 2025 – 26 தொடரில் பெங்கால் தங்களது முதல் போட்டியில் உத்தரகாண்ட்டை 8 வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் 39.3 ஓவர்களை வீசிய ஷமி 11 மெய்டன் உட்பட 7 விக்கெட்டுகளை எடுத்து பெங்கால் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ள அவர் அகர்கருக்கு தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் திறமையை பதிலடியாக நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.