ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ஆம் தேதி அபுதாபியில் 11வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலையில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு குர்பாஸ் 14, சேதிகுல்லா அடல் 18, கரீம் ஜானத் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். போதைகுறைக்கு மிடில் ஆர்டரில் ரசூலி 9, இப்ராஹிம் ஜாட்ரான் 24, ஓமர்சாய் 6 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 79/6 என சரிந்த ஆப்கானிஸ்தான் 120 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
மிரட்டிய நபி:
ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த முன்னாள் இந்நாள் கேப்டன்கள் முகமது நபி – ரசித் கான் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அதில் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய ரசித் கான் பின்னர் தடுமாறி 24 (23) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் முகமது நபி அதிரடியாக விளையாடி போராடினார்.
குறிப்பாக சமீரா வீசிய 19வது ஓவரில் 4, 4, 4, 2, 1 என ஹாட்ரிக் பௌண்டரிகளை அடித்த அவர் 15 ரன்கள் குவித்தார். அதை விட துணித் வெல்லலெகே வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் 6, 6, 6 என நபி அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அதனால் மிரண்டு போன பவுலர் அடுத்தப் பந்தை நோபால் போட்டார்.
20 பந்தில் சரவெடி 50:
அதற்காக வீசப்பட்ட மறுபந்திலும் சிக்ஸர் பறக்க விட்ட நபி 5வது பந்திலும் சிக்ஸர் தெறிக்க விட்டு கடைசி பந்தில் 60 (22) ரன்னில் அவுட்டானார். அவருடைய அட்டகாசமான ஆட்டத்தால் 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் 169/8 ரன்கள் குவித்து மிரட்டியது. இப்போட்டியில் 20 பந்துகளில் முகமது நபி அரை சதத்தை அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க: 403 ரன்ஸ்.. ஆஸி ஏ அணியை திருப்பி அடிக்கும் இந்தியா.. ஜுரேல், படிக்கல், சுதர்சன், ஜெகதீசன் அசத்தல்
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக அரை சதத்தை அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற ஓமர்சாய் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் இதே ஆசியக் கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிராக ஓமர்சாயும் 20 பந்துகளில் அரை சதத்தை அடித்துள்ளார். மறுபுறம் இலங்கைக்கு அதிகபட்சமாக நுவான் துஷாரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.



