தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகளில் ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சார்ஜாவில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலுக்கு ஆப்கானிஸ்தான் முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்தது. ஆனால் அப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா படுதோல்வியை பரிசளித்தது. அந்த தோல்விக்கு இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 106 ரன்களுக்கு சுருட்டி ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்தது.
ஒரே அணி இந்தியா:
மேலும் சமீப காலங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் அனைத்து டாப் அணிகளுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்தது ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒருமுறை கூட ஆப்கானிஸ்தான் வெற்றியை சந்தித்ததில்லை.
இதன் வாயிலாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்னும் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. அதே போல ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் முகமது நபி கடந்த 2009 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அப்போதிலிருந்து தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து தம்முடைய 15 வருட கேரியரில் அவர் 46 சர்வதேச அணிகளுக்கு எதிராக குறைந்தது ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சாதனை நாயகன் நபி:
குறிப்பாக டென்மார்க், பக்ரைன், மலேசியா, சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான், தாய்லாந்து, ஜப்பான், பஹாமாஸ், போஸ்ட்வானா, ஜெர்சி, பிஜி, தான்சானியா, இத்தாலி, அர்ஜென்டினா, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் ஆரம்பக்காலங்களில் ஆப்கானிஸ்தான் பதிவு செய்த வெற்றியில் இடம் பிடித்திருந்தார். அதே போல கேமன் ஐஸ்லேண்ட், ஓமன், சைனா, சிங்கப்பூர்,ட்ரினிடாட் மற்றும் டபாகோ, அமெரிக்கா, பூட்டான், மாலத்தீவுகள், பார்படாஸ், உகாண்டா, பெர்முடா அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, கனடா, கென்யா, ஹாங்காங், அமீரகம், ஜிம்பாப்வே, நேபாள் ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் அவர் வெற்றியை பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: இந்திய அணியின் வீரர்கள் தங்கியிருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலின் ஒரு அறையின் வாடகை – எவ்வளவு தெரியுமா?
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக உலகிலேயே 46 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக குறைந்தது ஒரு வெற்றியைப் பெற்ற வீரராக முகமது நபி உலக சாதனை படைத்துள்ளார்.



