ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. ஏற்கனவே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது இன்றைய போட்டியிலும் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ரோஹித் சர்மா எங்கும் செல்லவில்லை : முகமது கைப்
இருந்தாலும் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வேராக விளையாடிய ரோகித் சர்மா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 73 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். கடந்த போட்டியின் போது 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த அவர் இந்த போட்டியில் மீண்டும் சிறப்பாக கம்பேக் கொடுத்தது பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா தற்போது 38 வயதினை எட்டியுள்ளதால் அடுத்த 2027 உலக கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. மேலும் அதற்கான விளக்கத்தையும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா நிச்சயம் தொடர்ந்து விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் பகிர்ந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து அதிகளவு பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடினமான இந்த ஆடுகளத்தில், உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கில், கோலி போன்றோர் விரைவிலேயே ஆட்டமிழந்த போதும் ரோகித் சர்மா தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : தரமான இந்திய அணியை வீழ்த்தியதில் ரொம்ப ஹேப்பி.. வெற்றிக்கு பிறகு – மிட்சல் மார்ஷ் மகிழ்ச்சி
இன்றைய அடிலெய்டு போட்டியில் அவர் 73 ரன்கள் அடித்ததன் மூலம் நிறைய நம்பிக்கையை பெற்று இருப்பார். எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா எங்கும் செல்லவில்லை அவர் தொடர்ந்து விளையாடுவார் என முகமது கைப் குறிப்பிட்டுள்ளார்.



