இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று அடிலெய்டு நகரில் நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்தது.
தரமான இந்திய அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி : மிட்சல் மார்ஷ்
பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு 46.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டியின் போதே நான் எங்களது அணியின் வீரர்களிடையே இப்படி ஒரு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு இடையே விளையாடுவது சிறப்பான ஒன்று என்று கூறியிருந்தேன்.
அதோடு இவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் ஆடுவது அரிதான ஒன்று. இந்தத் தொடரில் நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தேன். இந்த முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் ஹேசல்வுட் விக்கெட் எடுக்காமல் சென்றதை பார்க்கையில் அரிதான ஒரு நிகழ்வு நடைபெற்றதாக நினைக்கிறேன். இப்படி அவர் விக்கெட் எடுக்காமல் பந்து வீசியதை நான் பார்த்ததில்லை.
இருந்தாலும் மற்ற பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தேவையான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தனர். பேட்டிங்கில் ஓவன் மற்றும் கூப்பர் ஆகிய இருவருமே மிகச் சிறப்பாக விளையாடினர். எதிர்கால ஆஸ்திரேலிய அணி பலமாக இருப்பதை உணர்கிறேன். இந்த தொடரினை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இன்று இரவு நான் அதிகமாக கொண்டாடப் போவதில்லை.
இதையும் படிங்க : உங்களுடன் விளையாடியது மகிழ்ச்சி.. ரோஹித்துடன் இணைந்து எடுத்த செல்பியை பகிர்ந்த – ஆடம் கில்க்ரிஸ்ட்
ஏனெனில் அடுத்த போட்டி எங்களுக்கு காத்திருக்கிறது. இந்தியா ஒரு மிகச் சிறப்பான அணி. அனுபவம் வாய்ந்த வீரர்களும், இளம் வீரர்களும் அந்த அணியில் நிறைந்து இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடியதில் சிறந்த அனுபவமாக கருதுவதாகவும் மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.



