
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக புனே நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 12/3 என தடுமாறிய இந்தியாவை பாண்டியா, துபே தலா 53 ரன்கள் அடித்து காப்பாற்றினார்கள்.
இந்நிலையில் 140 மக்கள் தொகைக் கொண்ட இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை என்று முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்ப்பால் வேதனையடைந்த பாண்டியா அதிலிருந்து வந்தது பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியது பின்வருமாறு.
“2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கைப் பற்றி மக்கள் பேசினார்கள். மும்பையில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசாத அதே பாண்டியா தான் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரை வீசி நமது கையில் கோப்பையை பெற்றுக்கொடுத்தார். இந்தியா வென்ற பின் அவர் மனதிலிருந்து நாட்டுக்காக அழுதார்”
“ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற போது கூட அவர் இவ்வளவு உணர்வுகளை காட்டியதில்லை. 2023 உலகக் கோப்பையில் இதே புனே மைதானத்தில் காயமடைந்த அவருக்கு பதிலான மாற்று வீரர் உங்களிடம் கிடைக்கவில்லை. ஷமி விளையாட வந்தாலும் இந்தியா 7 பேட்ஸ்மேன்கள் 4 பவுலர்களுடன் விளையாடியது. அப்போது 8வது பேட்ஸ்மேன் இல்லை. ஹர்திக் பாண்டியா இந்த அணியின் முதுகெலும்பு”
“ஏனெனில் காயத்தைச் சந்தித்த போது அவருக்கான மாற்று வீரர் இல்லை. அணிக்குத் தேவைப்படும் போது ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுக்கும் அவர் டி20 உலகக் கோப்பையில் அதிரடியான கெளரவ ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால் தற்போது அவர் கேப்டனாக இல்லை. அதற்காக மனிதராக இருக்கும் அவர் சோகமாக இருக்க மாட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
இதையும் படிங்க: ரஞ்சி தேவையில்லை.. விராட் கோலிக்கு மரியாதையுடன் இதை கொடுத்தாவே நெருப்பு பத்திக்கும்.. ராயுடு கருத்து
“சொல்லப்போனால் தற்போது அவர் துணைக் கேப்டனாக கூட இல்லை. ஐபிஎல் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் அவர் குஜராத்துக்கு கோப்பையை வென்று ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். தற்போது சூரியகுமார் கேப்டனாக இருக்கும் நிலையில் பாண்டியா தனது வேலையில் சிறந்த செயல்பாடுகளை கொடுத்து வருகிறார். எனவே பாண்டியா போன்ற வீரர் நம் நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். 1.4 பில்லியன் மக்கள் கொண்ட நம் நாட்டில் பாண்டியா மட்டுமே தற்சமயத்தில் தரமான ஆல் ரவுண்டராக இருக்கிறார்” எனக் கூறினார்.